×

எல்லா நாடுகளுக்கும் ஒரே சதவீதம் கிரீன் கார்டு உச்சவரம்பு சட்டத்தை நீக்க மசோதா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு கிரீன் கார்டு வழங்குவதில் பின்பற்றப்படும் உச்ச வரம்பை நீக்குவதற்கான மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் வேலை செய்கின்றனர். அங்கேயே நீண்ட காலம் தங்கி வேலை செய்து, அமெரிக்காவின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பங்களிப்பு தருபவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. இதன்மூலம், அமெரிக்காவில் நிரந்தரமாக வாழ்வதற்கான அதிகாரம் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால், இந்த கிரீன் கார்டு வழங்குவதில் உச்சவரம்பு பின்பற்றப்படுகிறது.

பெரிய நாடுகள், சிறிய நாடுகள் என்று பாரபட்சம் பார்க்காமல், எல்லா நாடுகளுக்கும் ஆண்டுக்கு 7 சதவீதம் கிரீன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இது, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா போன்ற பெரிய மக்கள் தொகை நாடுகளை சேர்ந்தவர்ளுக்கும் வங்கதேசம், இலங்கை போன்ற சிறிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் ஒரே சதவீதத்தில் கிரீன் கார்டு வழங்கப்படுவதால், பெரிய நாடுகளை சேர்ந்த திறமையான ஊழியர்களின் திறனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதாக அமெரிக்க எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த உச்ச வரம்பு சட்டம் கடந்த 1990ல் கொண்டு வரப்பட்டு, பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் பதவியேற்ற அதிபர் ஜோ பைடன், இந்த சட்டத்தை நீக்க முடிவு செய்துள்ளார். இதற்கான மசோசாவை அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில், ஜோ லாப்கிரீன், ஜான் கர்ட்டிஸ் ஆகிய எம்பி.க்கள் தாக்கல் செய்தனர். இங்கு இது நிறைவேற்றப்பட்ட பிறகு, செனட் சபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அங்கு நிறைவேற்றப்பட்ட பிறகு அதிபர் பைடன் அதை சட்டமாக அறிவிக்க உள்ளார். இந்த மசோதாவில், தற்போது எல்லா நாடுகளுக்கும் சரிசம அளவில் அளிக்கப்பட்டு வரும் 7 சதவீத உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கிரீன்கார்டு சதவீதம் 7ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், இந்திய ஊழியர்களுக்கு பெரியளவில் பலன் ஏற்படும். அதனால், அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Tags : US Congress , Bill to remove one percent green card ceiling law for all countries: Filed in the US Congress
× RELATED அமெரிக்க நாடாளுமன்றம் அருகே காரை...