×

டொமினிகாவில் சிக்கி இருக்கும் மெகுல் சோக்சியை நாடு கடத்துவதில் சிக்கல்: இந்திய குடிமகனா? இல்லையா? என புதிய சர்ச்சை

புதுடெல்லி: டொமினிகாவில் இந்திய வைர வியாபாரி இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘இந்திய குடிமகன் அல்லாத அவரை, இந்தியாவுக்கு எப்படி நாடு கடத்த உத்தரவிட முடியும்?,’ என்ற புதிய கேள்வியை அவருடைய வழக்கறிஞர்கள் கிளப்பியுள்ளனர். இந்தியாவில் மிகப்பெரிய நகைக்கடை நிறுவனங்களில் ஒன்றான ‘கீதாஞ்சலி’யை நடத்தி வந்தவர்  பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி. இவரும் குஜராத் வைர வியாபாரியான நீரவ் மோடியும் தொழில் கூட்டாளிகள் மட்டுமின்றி, உறவினர்களும் கூட. இவர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடியை கடன் வாங்கி மோசடி செய்து விட்டு வெளிநாடு தப்பினர். இவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கு சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

நீரவ் மோடியை நாடு கடத்த லண்டன் நீதிமன்றமும்,  உள்துறை அமைச்சகமும் அனுமதி அளித்துவிட்ட நிலையில், அவர்  உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், அவரை நாடு கடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில்தான், டொமினிகா நாட்டில் சட்ட விரோதமாக நுழைந்ததாக சில தினங்களுக்கு முன் சோக்சி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு, டொமினிகா நீதிமன்றத்தில் நடக்கிறது. சோக்சியை டொமினிகாவில் இருந்து நாடு கடத்தி வருவதற்காக, அந்நாட்டுக்கு இந்திய குழு சென்றுள்ளது.

இந்த குழு அங்கு தங்கியிருந்து, டொமினிகா நாட்டு அதிகாரிகளிடம் சோக்சி மீது இந்தியாவில் உள்ள 11 வழக்குகள் பற்றி விளக்கம் அளித்துள்ளனர். அவரை ஏற்கனவே கைது செய்வதற்கு சர்வதேச போலீசான இன்டபர்போல் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், அவரை நாடு கடத்துவதற்கான  முயற்சியில் இக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு டொமினிகா அரசும் ஆதரவாக உள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிடும்படி நீதிமன்றத்தில் வாதிட்டு வருகிறது. ஆனால், சோக்சியின் வழக்கறிஞர்கள் குழு புதிய சிக்கலை கிளப்பி இருக்கிறது. ஆன்டிகுவா நாட்டின் குடியுரிமையை 2017ல் சோக்சி பெற்ற போதே, இந்திய குடியுரிமை கைவிட்டு விட்டதாகவும், பாஸ்போர்ட்டை இந்திய அரசிடம் ஒப்படைத்து விட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில், இந்திய குடிமகனாக இல்லாத இல்லாத அவரை அந்நாட்டு அரசிடம் எப்படி ஒப்படைக்க முடியும்? என்ற கேள்வியையும் நீதிமன்றத்தில் எழுப்பி உள்ளனர். அதேபோல், சோக்சி தற்போது தனது நாட்டு குடிமகன் என்பதால் அவருக்கு அந்நாட்டு சட்டப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என, ஆன்டிகுவா நாட்டின் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ‘சோக்சி தனது  இந்திய குடியுரிமையை மத்திய அரசிடம் இன்னும் ஒப்படைக்கவில்லை. அவருடைய குடியுரிமையை ரத்து செய்ததாக மத்திய அரசும் இதுவரையில் ஒப்புதல் கடிதம் அளி்ககவில்லை. எனவே, சட்டப்படி இப்போதும்  அவர் இந்தியக் குடிமகன்தான். இதனால் அவரை நாடு கடத்துவதில் சட்ட ரீதியாக எவ்வித சிக்கலும் எழாது,’ என்றே இந்திய சட்ட நிபுணர்களும், சிபிஐ அதிகாரிகளும் கூறியுள்ளனர்.

* சிபிஐ பெண் அதிகாரி
சோக்சியை நாடு கடத்தி வருவதற்காக டொமினிகாவில் முகாமிட்டுள்ள இந்திய குழுவில் சிபிஐ, அமலாக்கத் துறை, வெளியுறவு அதிகாரிகள் என மொத்தம் 8 பேர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவுக்கு ஷர்தா ரவுத் என்ற பெண் சிபிஐ அதிகாரி தலைமை தாங்கி சென்றுள்ளார். இந்தியாவில் சோக்சி மீதான வழக்குகளை இவர்தான் விசாரித்து வருகின்றனர்.

* அழகி மூலம் விரித்த வலை
தனது நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததால் சோக்சியை கைது செய்ததாக நீதிமன்றத்தில் டொமினிகா நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், சோக்சியின் வழக்கறிஞர்கள், ‘ஆன்குடிவாவில் 6 மாதங்களாக அழகி ஒருவருடன் சோக்சி நெருங்கி பழகி வந்தார். கடந்த மாதம் 23ம் தேதி தனது வீட்டுக்கு வரும்படி அழகி அவரை அழைத்தார். அதன்படி, அங்கு சென்ற சோக்சியை முரட்டு கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி, படகு மூலமாக டொமினிகாவுக்கு வலுக்கட்டாயமாக கடத்தி வந்துள்ளது. எனவே, சோக்சி சட்ட விரோதமாக இங்கு வரவில்லை. கடத்தி வரப்பட்டுள்ளார்,’ என்று வாதிட்டு வருகின்றனர்.

* சோக்சிக்கு ஜாமீன் மறுப்பு
டொமினிகா நீதிமன்றத்தில் சோக்சி மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீல நிற சட்டை, கருப்பு நிற சட்டை அணிந்து சக்கர நாற்காலியில் சோக்சி ஆஜரானார். அப்போது, தான் சட்ட விரோதமாக நுழையவில்லை என்றும், கடத்தி கொண்டு வரப்பட்டதாகவும் நீதிபதியிடம் அவர் கூறினார். ஆனால், ‘சோக்சிக்கு ஜாமீன் வழங்கினால் அவர் வெளிநாடு தப்பி செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில், அவருக்கு எதிராக 11 குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மேலும், அவரை கைது செய்வதற்கு சர்வதேச போலீசும் (இன்டர்போல்) நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது,’ என்று டொமினிகா அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, சோக்சிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Mikul Choksi ,Dominica , Problem in deporting Mikul Choksi trapped in Dominica: Indian citizen? Isn't it As the new controversy
× RELATED இன்னிங்ஸ், 141 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி