×

போரூர்- பூந்தமல்லி இடையே 7.9 கி.மீ தூரத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்குகிறது: அதிகாரி தகவல்

சென்னை: போரூர் - பூந்தமல்லி இடையேயான 7.9 கி.மீ நீளத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்குகிறது என்று மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ தூரத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, 118.9 கி.மீ தூரத்துக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், மெரினா கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ, மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ, மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரே ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த வழித்தடங்களில் 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் 30 ரயில் நிலையங்களும், மாதவரம் - சோழிங்கந்லூர் தடத்தில் 48 ரயில் நிலையங்களும், மாதரவம் - சிறுசேரி சிப்காட் தடத்தில் 50 ரயில் நிலையங்களும் அமைய உள்ளன. இந்த திட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கட்டுமான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, அந்த ஒப்பந்த நிறுவனங்கள் சார்பில் சுரங்க மற்றும் உயர்மட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது.

இதற்காக, ஒப்பந்த நிறுவனங்கள் சார்பில் ஆரம்ப கட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, மெரினா கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையே, 26 கி.மீ தூரத்தில் பேரிகார்டுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பூந்தமல்லி பைபாஸ் மற்றும் நசரத்பேட்டை வரை டிரில்லிங் போடும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கிறது. இதற்காக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு 28 நாட்களுக்குள் இப்பணிகள் முடிக்கப்படுகிறது. போரூர் - பூந்தமல்லி இடையேயான 7.9 கி.மீ நீளத்தில் நடக்கும் உயர்மட்ட பாதைக்கான கட்டுமான பணிகள் 3 வருடத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளன.

இந்த வழித்தடத்தில் சென்னை பைபாஸ் சாலையை கடந்து ராமச்சந்திரா மருத்துவமனை, ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, முல்லை தோட்டம், பூந்தமல்லி பணிமனை உட்பட 9 ரயில் நிலையங்கள் அமைகிறது. கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு வரை 9 ரயில் நிலையங்கள் வருகிறது. இதில், ரயில் உயர் மட்ட பாதை 7.9 கி.மீ தூரம் அமைக்கப்படுகிறது. 118.9 கி.மீ நீளத்தில் மூன்று வழித்தடங்களிலும் இரண்டாம் கட்ட பணிகள் 2026ல் முடிக்கப்படும் என்று மெட்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Porur-Poonamallee Metro ,Rail ,Line , 7.9 km Porur-Poonamallee Metro Rail project to start soon: Official Information
× RELATED சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில்...