×

ஆந்திரா, கர்நாடகா, ஓசூரில் இருந்து கார், கன்டெய்னர், வேனில் கடத்திய 11,189 மதுபாட்டில்கள் பறிமுதல்: 16 பேர் கைது

சென்னை: வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக மதுவிலக்கு பிரிவு ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோருக்கு தகவல் கிடைத்தது. இதனால், மாநில எல்லைகளில் மதுவிலக்கு சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கிவரும் ஜுஜிவாடி மற்றும் டிவிஎஸ் சோதனை சாவடிகளில் வாகன சோதனை  நடத்தப்பட்டது. அப்போது கர்நாடகாவில் இருந்து லாரி, வேனில் கடத்தி வரப்பட்ட 6,384 கர்நாடக மாநில மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக திருப்பத்தூர் சுந்தரம்பள்ளியை சேர்ந்த பார்த்திபன் (29), சண்முகம், பெங்களூருவை சேர்ந்த தினேஷ் (32), வெங்கடநாராயணன், கங்கை, விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த வாகன சோதனையில், ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 1300 ஆந்திர மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, திருவெற்றியூரை சேர்ந்த சிவகுமார் (37) கைது செய்யப்பட்டார்.
அண்ணாநகர்: சென்னை அரும்பாக்கம் நடுவாங்கரை பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 2 மணி அளவில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஒரு கன்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டு, அதில் உள்ள பார்சல்கள் மர்மமான முறையில் 3 காரில் ஏற்றப்படுவதாக அரும்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர்.

இதில், லாரி டிரைவர் மட்டும் பிடிபட்டார். அவரை மடக்கி பிடித்தனர். பின்னர், அந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது, மது பாட்டில்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, 3,357 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 கார்கள், ஒரு கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். விசாரணையில், பிடிபட்ட நபர் நேபாளத்தை சேர்ந்த சோனு (35) என்பதும், கர்நாடகாவில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பூர்: ஆந்திராவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து கொடுங்கையூர் தென்றல் நகர் 4வது தெருவில் பதுக்கி விற்ற அசோக்குமாரை (27), போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 48 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பல்லாவரம்: திருநீர்மலை சர்வீஸ் சாலையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியே வந்த 2 சொகுசு கார் மற்றும் ஒரு மினி வேனை மடக்கி சோதனையிட்டனர். அதில், காரில் 750 கிலோ குட்கா மற்றும் 100 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து, காரில் வந்த அனகாபுத்தூர் காமராஜபுரம் தென்றல் நகரை சேர்ந்த அருட்செல்வம் (36), குன்றத்தூர் மணிகண்டன் நகரை சேர்ந்த சுரேஷ் (33), அவரது சகோதரர் ராஜேஷ் (32), அனகாபுத்தூர் அண்ணா நகரை சேர்ந்த பிரசாத் (36), தாம்பரம் சானடோரியம் மீனாட்சி நகரை சேர்ந்த ரங்கன் (30), ஓசூர் பத்தல்பள்ளி கிராமத்தை சேர்ந்த முருகேஷ் (33) மற்றும் முபாரக் (எ) பாபு (20) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள், ஓசூரிலிருந்து குட்கா மற்றும் மதுபாட்டில்களை மொத்தமாக கடத்தி வந்து, சென்னை புறநகர் பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கடத்தலுக்கு பயன்படுத்திய 2 சொகுசு கார்கள் மற்றும் ஒரு மினி வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Hosur, Andhra Pradesh, Karnataka , Andhra, Karnataka, 16 arrested for smuggling 11,189 bottles of liquor in car, container and van from Hosur
× RELATED ஆன்லைனில் தொழில் செய்யலாம் எனக்கூறி...