×

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கோயில் பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை, 15 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கோயில் பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை, சுமார் ரூ.1000 மதிப்பிலான 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு காலத்தில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாததால் கோயில்களில் நிலையான மாதச் சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள், இதர பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், கோயில் ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு நிதியுதவி வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

கோயில் ஊழியர்களின் கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து, கோயில் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு, கோயில்களில் மாதச் சம்பளம் பெறாமல் பணியாற்றும் கோயில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள், இதர பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கு ஆணையிட்டார். அதன்படி, முதல்வர் ஸ்டாலின் மாதச் சம்பளம் இல்லாமல் பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித் தொகையும், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக, திருமுல்லைவாயில்- பிடாரி எட்டியம்மன் கோயில், பிடாரி பொன்னியம்மன் கோயில், பூங்காநகர்- கந்தகோட்டம் முத்துக் குமாரசுவாமி கோயில், அத்திப்பட்டு- கிருஷ்ணசாமி பெருமாள்கோயில், சென்னை -சென்னமல்லீஸ்வரர் மற்றும் சென்ன கேசவப் பெருமாள் கோயில், பைராகிமடம்- பைராகிமடம் திருவேங்கடமுடையார் வெங்கடேசப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் பணியாற்றும் 12 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள் மற்றும் பூசாரிகள் ஆகியோர்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Temple ,Corona ,Q. Stalin , Rs 4,000 stipend for temple workers affected by Corona livelihood
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...