தென்மேற்கு பருவமழை தொடங்கியது: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் தொடங்கியதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் நீடித்து வரும் கோடை வெயில் முடிவுக்கு வந்துள்ள நிலையில், கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.  இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதன் காரணமாக வங்கக் கடலில் யாஸ் புயல் உருவாகி வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று மேற்கு வங்கத்தில் கரையைக் கடந்தது. அதனால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஜூன் 3ம் தேதி கேரளாவில் தென் மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும் என்று கணிக்கப்பட்டது. அதன்படி நேற்று தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. அதனால், கேரளாவிலும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு நல்ல மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட சற்று கூடுதலாக பெய்யும். தென்மேற்கு பருவமழை துவங்கியதை அடுத்து கேரள அரசு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பேரிடர் மீட்புக் குழுவினரும் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது. தென் மேற்கு பருவமழையின் தொடர்ச்சியாக தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் 6ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

* இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட சற்று கூடுதலாக பெய்யும்.

* தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும்.

* தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

Related Stories:

>