கொரோனா தொற்று காலத்தில் களப்பணியாற்றி வரும் 1.17 லட்சம் போலீசாருக்கு ஊக்கத்தொகை

* திருநங்கைகள்-மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பஸ்களில் இலவச பயண சலுகை

* மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம்

* சென்னையில் ரூ.250 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை

* எழுத்தாளர்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்கம், கனவு இல்லம்

* திருவாரூர் மாவட்டத்தில் ரூ.30 கோடியில் நெல்சேமிப்பு கிடங்கு

* கலைஞர் பிறந்த நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக காவல்துறையில் உள்ள 1.17 லட்சம் போலீசாருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை, தென் சென்னையில் ரூ.250 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம், இலக்கிய மாமணி விருது துவக்கம், கனவு இல்லம், திருவாரூர் மாவட்டத்தில் ரூ.30 கோடியில் நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உலர்களங்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணச்சலுகை ஆகிய 7 புதிய திட்டங்களை கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞரின் 98வது பிறந்தநாள் நேற்று தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. பல்வேறு இடங்களில் கலைஞரின் படத்திற்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலையில், கலைஞர் நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் முரசொலி அலுவலகம், கோபாலபுரம் இல்லம் சென்று மலர் தூவி மரியாதை செய்தார்.

பின்னர் தலைமைச் செயலகம் சென்றவர், கொரோனா நிவாரண நிதியாக 2வது முறையாக வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம், ரேசன் கடைகளில் 14 பொருட்கள் வழங்கும் திட்டம், அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4 ஆயிரம், கொரோனாவால் மரணமடைந்த பத்திரிகையாளர், மருத்துவர், போலீசாரின் குடும்பத்திற்கு நிதி உதவி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தில் மனு அளித்தவர்களுக்கு உதவிகள் என பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் மேலும் 7 புதிய அறிவிப்புக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: உலகிலே எந்த முதல்வரும் பெற்றிராத பெருமையை கொண்டவர் கலைஞர்.  தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக ஆட்சி கட்டிலிலே அமர்ந்து, நல்லாட்சி நடத்தியவர். சீர்மிகு திட்டங்களை பார்போற்றும் வகையில் தீட்டிச் செயல்படுத்தியவர். ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர். பெரியாரின் சலியாத உழைப்பும், காமராஜரின் அயராத தொண்டும், அண்ணாவின் பரந்த உள்ளமும் தன்னகத்தே கொண்டிருந்தவர். உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர். தன் அரசியல் அனுபவங்கள் அனைத்தையும், அடித்தட்டில் வாழ்கிற மக்களின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக் கொண்டவர். அவரது நினைவை போற்றும் வகையில்,

1 கர்ப்பிணி பெண்களுக்கு பேருதவியாக விளங்கக்கூடிய டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டம், ஏழை எளியோரின் உயிர் காக்கும் காப்பீட்டு திட்டம், பார்வை இழந்தோருக்கு இலவச கண்ணொளி வழங்கும் திட்டம் கலைஞரின் சிந்தனையில் உதித்தவையே. தான் வாழ்ந்த இல்லத்தை ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ வசதியினை தரும் மருத்துவமனையாக பயன்படுத்துவதற்கு தானமாக அளித்துள்ளார். நம் நெஞ்சமெல்லாம் வீற்றிருக்கும் அவரின் நினைவை போற்றும் வகையில், சென்னை பெருநகரத்தில் (தென் சென்னை, கிண்டி) உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், ரூ.250 கோடி செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்.

2 புத்தகங்கள் மீதும், புத்தகங்களை வாசிப்பதன் மீதும் கலைஞருக்கு வாழ்நாள் முழுவதும் இருந்த தீரா பற்றினை அனைவரும் நன்கு அறிவோம். இதன் வெளிப்பாடாகத்தான், 2010ம் ஆண்டில், பேரறிஞர் அண்ணா 102வது பிறந்தநாள் அன்று, சென்னை கோட்டூர்புரத்தில், ஆசியாவின் அதி நவீன மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார். மாணவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், இளைஞர்கள், பள்ளி சிறார்கள் என சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் கலங்கரை விளக்கமாக இந்த நூலகம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், இத்தகைய அரிய வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடியவகையில், மதுரையில் ரூ.70 கோடி செலவில், கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படும்.

3 இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழக அரசின் சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், “இலக்கிய மாமணி” என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். இந்த விருதாளர்களுக்கு பாராட்டு பத்திரம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்படும்.  

4 தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழக அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.

5 விவசாயிகளின் நலன் காக்கும் இந்த அரசு, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவரால் இனங்கண்டு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களிலும் ரூ.24 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 16,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். மேலும், அறுவடைக்கு பின் தானியம் மற்றும் பயறு வகைகளை சரியான முறையில் உலர வைக்காததால் ஏற்படும் இழப்பினை தவிர்க்க விவசாயிகள் நலன் கருதி திருவாரூர் மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 10 வட்டாரங்களில் சூரிய ஒளியில் உலர்விக்கும் 50 களங்களும், கோட்டூர் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் 2 மறுசுழற்சி தொகுப்பு உலர்விப்பான்களும், நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி வட்டாரங்களில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் 2 தொடர் ஓட்ட உலர்விப்பான்களும் ஆக மொத்தம் ரூ.6 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 54 உலர்களம் மற்றும் உலர்விப்பான்கள் ஏற்படுத்தப்படும்.

6 மகளிர் நலன் கருதி இந்த அரசு பொறுப்பேற்ற அன்றே மகளிருக்கு அரசு நகர பேருந்துகளில் இலவச பயண சலுகையை அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் நகரப்புற அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகை வழங்கப்படும். ஊரடங்கு காலம் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்.

7 கோவிட்-19 பெருந்தொற்று உலகளவில் மட்டுமல்ல இந்தியாவில், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கோவிட் தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின்போது காவல்துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர். அவர்களது இன்றியமையாத பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களது பணியினை ஊக்குவிக்கும் விதமாகவும் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். புத்தகங்கள் மீது கலைஞருக்கு இருந்த தீரா பற்றின் வெளிப்பாடாகத்தான் சென்னை கோட்டூர்புரத்தில், ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், இத்தகைய அரிய வாய்ப்பினை பெறும் நோக்கத்தோடு, மதுரையில் ரூ.70 கோடி செலவில், கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படுகிறது.

Related Stories:

>