சென்னையில் கூடுதலாக 7 மருத்துவமனையில் தடையில்லா மின்சாரம் வழங்க இரு மின்வழித்தட வசதி: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: சென்னையில் கூடுதலாக 7 மருத்துவமனையில் தடையில்லா மின்சாரம் வழங்க இரு மின்வழித்தட வசதி ஏற்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். ஸ்டான்லியில் உள்ள கொரோனா தடுப்பூசி மையம், கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட், எழும்பூர் குழந்தைகள் னால மருத்துவமனை, பெரியார் நகர் கொளத்தூர் அரசாங்க மருத்துவமனை ஆகியவற்றில் இரு மின்வழித்தட வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், கொரோனா சிகிச்சை மற்றும் பிற சிகிச்சைகளுக்காக வரும் பொது மக்கள் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்களின் நலத்தினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆணைப்படி சென்னையில் கூடுதலாக 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக இரு மின்வழித்தட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் தண்டையார்பேட்டை தொற்று நோய் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் உள்ளது. அதுபோல தொடர் மின் சுற்று கருவி கீழ்கண்ட ஏழு மருத்துவமனைகளில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.

* ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கொரானா தடுப்பூசி மையம்

* குழந்தைகள் நல மருத்துவமனை, எழும்பூர்

* அரசாங்க மருத்துவமனை, பெரியார் நகர், கொளத்தூர்

* கஸ்தூரிபாய் காயதி அரசாங்க மருத்துவனை, சேப்பாக்கம்

* கிங்ஸ் இன்ஸ்டியூட், கிண்டி

* சானிடோரியம் டி.பி மருத்துவமனை, தாம்பரம்

* இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கே.கே. நகர்

இந்த அமைப்பின் மூலம் இந்த மருத்துவமனைகளில் தலா இரு மின்வழித்தடங்களில் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு மின்வழித்தடத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதிகபட்சமாக மூன்று விநாடிகளிலேயே தானாகவே தற்போது அமைக்கப்பட்டு இருக்கும் கருவியின் மூலம் மற்றொரு மின்வழித்தடத்தின் வாயிலாக மின்சாரமானது தொடர்ச்சியாக இந்த மருத்துவமனைகளில் வழங்கப்படும். இதன் மூலம் எவ்வித அசாதாரண சூழலிலும் தங்கு தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைக்கும்.

இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆணையின்படி ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அனைவருக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>