×

வெப்பச் சலனத்தால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை!: விவசாயிகள், கிராம மக்கள் மகிழ்ச்சி..!!

ஈரோடு: வெப்பச் சலனம் காரணமாக ஈரோடு, அந்தியூர், திண்டுக்கல் சுற்றுவட்டாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உஷ்ணம் நிலவி வந்த நிலையில், புதுமாரியம்மன் கோவில், வட்டக்காடு, புதுப்பாளையம் உட்பட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. சுமார் 2 மணி நேரம் கொட்டிய மழையால் குளிர்ச்சி நிலவி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தில் சுமார் 2 மணி நேரமாக கனமழை கொட்டியது. 


காவேரி நகர், சின்னப்பநாயக்கன் பாளையம், தட்டாங்குட்டை, உடையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இரவு 7 மணியளவில் சூறாவளி காற்று வீசியது. காற்றின் வேகத்தால் சாலையில் கிடந்த மண் அந்த வழியாக செல்வோர் மீது வீசி அடித்தது. சூறாவளி காற்றின் பெருத்த ஆரவாரத்தை தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் சாலையில் வடிகாலுக்காக வெட்டப்பட்ட கால்வாயில் மழைநீர் தேங்கியது. குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள கோம்பு பள்ளத்தில் மழைநீர் பெருக்கெடுத்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 


இதேபோன்று திண்டுக்கல் சுற்றுவட்டாரத்திலும் 2வது நாளாக சுமார் 1 மணி நேரம் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. திண்டுக்கல் சுற்றுவட்டாரத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்ததும் வெயில் வாட்டி வந்த நிலையில், சின்னாளப்பட்டி, ராஜக்காப்பட்டி, செம்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியதை அடுத்து பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சாய்னார்பட்டி சுற்றுவட்டாரத்தில் ரெட்டியபட்டி, நொச்சி ஓடயப்பட்டி, விராலிப்பட்டி, தவசிமேடை உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கொட்டிய மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. 



Tags : Tamil Nadu , Heat wave, Tamil Nadu, heavy rain
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...