முத்தமிழ் கலைஞரின் 98வது பிறந்தநாளை ஒட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!!

சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞரின் 98வது பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். கொரோனா தொற்று பரவல் அசாதாரணமான சூழலின் காரணமாக கலைஞரின் பிறந்தநாள் நிகழ்ச்சியை பொதுவெளியில் கொண்டாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. எனவே ஆக்கபூர்வமான வகையில் மட்டும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைஞரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். எளிய மக்களுக்கு உதவும் வகையில் நலத்திட்ட உதவிகள் பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது. 

சென்னையிலும் பல இடங்களில் அக்கட்சியினர் உதவி புரிந்து வருகின்றனர். சென்னை மெரினாவில் முத்தமிழ் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது நினைவிடத்தில் போராளியின் வழியில் தொடரும் வெற்றிப் பயணம் என எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கலைஞரின் 98வது பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாட்டில் 5 திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். நினைவிட பராமரிப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. முன்கள பணியாளர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

Related Stories:

>