×

கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழக முதல்வரும், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதலில் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு திருவிக நகர் 6வது மண்டலத்தில் கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்த மாநகராட்சி பணியாளர்கள் 63 பேர், பெரம்பூர் லூர்து பள்ளியில் கொரோனா நோய் தொற்று காலத்தில் இடைவிடாமல் பணியாற்றிய 118 செவிலியர்கள், சட்டமன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் ஆகியோருக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். அதைத்தொடர்ந்து அனிதா அச்சிவர்ஸ் அகாடமியில் பயிலும் 1499 மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்யும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கொளத்தூர் ஜி.கே.எம் காலனி நாடார் திருமண மண்டபத்தில் 100 ஓவியர்களுக்கு ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பு இன்றி இருப்பவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், ஜி.கே.எம்.காலனி தனியார் திருமண மண்டபத்தில் ஒளி ஒலி அமைப்பாளர்கள் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் ஜி.கே.எம்.காலணி அரிச்சந்திரன் விளையாட்டு மைதானத்தில் கட்சியின் மூத்த முன்னோடிகள் 250 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து, கொளத்தூர் எவர்வின் பள்ளியில் கொரோனா தடுப்பூசி மையத்தில் 10,000 தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, எவர்வின் பள்ளியின் மூத்த முதல்வர் புருஷோத்தம்மனுக்கு பரிசு கொடுத்து கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, பரந்தாமன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வயதான தம்பதிக்கு மாஸ்க்
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவி செய்துவிட்டு தனது சட்டமன்ற அலுவலகத்தில் இருந்து அடுத்த இடத்திற்கு சென்றார். அப்போது வழியில் முதல்வர் வருகையை பார்ப்பதற்காக பொதுமக்கள் தங்களது இல்லங்களில் ஆவலுடன் நின்றிருந்தனர். அப்போது, ஒரு வீட்டின் வௌியே முகக்கவசம் அணியாமல் நின்றிருந்த வயதான தம்பதியை பார்த்த முதல்வர் காரை நிறுத்த சொல்லி காரிலிருந்து கீழே இறங்கி அவர்களுக்கு முகக்கவசம் வழங்கினார். மேலும், அவர்களிடம் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து நலம் விசாரித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அங்கிருந்த பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.



Tags : Colatur ,Q. Stalin , Welfare assistance in Kolathur constituency: Chief Minister MK Stalin presented
× RELATED கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு