மாநகராட்சி பகுதிகளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி: ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி  முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், பின்னர் 45 வயதிற்கு மேற்பட்ட இணைய நோயுள்ள நபர்களுக்கும், அதனைத் தொடர்ந்து 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இத்துடன் மருத்துவ பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் என முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி அவர்களுக்கு விரைந்து தடுப்பூசி வழங்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி வழங்க உதவி எண்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் பதிவு செய்யும் நபர்களுக்கு தடுப்பூசி வழங்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுநாள் வரை 2,464 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் 195 நபர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் என மொத்தம் 2,659 தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கே சென்று செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும் தடுப்பூசி வழங்கலாம் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள நிலையில் தற்போதைய தடுப்பூசி இருப்பினை கருத்தில்கொண்டு தமிழக அரசு 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி முகாம்களின் வாயிலாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுநாள் வரை 15 லட்சத்து 34 ஆயிரத்து 439 நபர்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 4 லட்சத்து 88 ஆயிரத்து 706 நபர்களுக்கு இரண்டாம் தவணைத்  தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.  சென்னை மாநகராட்சியின் சார்பில் கடந்த 31ம் தேதி வரை  20 லட்சத்து 23 ஆயிரத்து 145  தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு விலையில்லாமல் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகளை செலுத்துவதற்காக நகர்புற சமுதாய நல மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், தடுப்பூசி சிறப்பு முகாம்கள்,  மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகள் மற்றும் மின்னணு வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு என பல்வேறு வகைகளில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைத்து  இலக்கை மாநகராட்சி அடைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>