×

அறிமுக வீரர் கான்வே அசத்தல் நியூசிலாந்து நிதான ஆட்டம்

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், நியூசிலாந்து அணி நிதானமாக விளையாடி ரன் குவித்து வருகிறது. அறிமுக தொடக்க வீரர் கான்வே சதம் விளாசி சாதனை படைத்தார். லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் டிவோன் கான்வே அறிமுக வீரராக இடம் பெற்றார். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் பிரேசி, ஓலி ராபின்சன் அறிமுகமாகினர். நியூசிலாந்து தொடக்க வீரர்களாக டாம் லாதம், டிவோன் கான்வே (29 வயது) களமிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 16 ஓவரில் 58 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது. லாதம் 23 ரன் எடுத்து (57 பந்து, 2 பவுண்டரி) ராபின்சன் வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த வில்லியம்சன் 13 ரன் மட்டுமே எடுத்து ஆண்டர்சன் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார்.

ராஸ் டெய்லர் 14 ரன் எடுத்து ராபின்சன் பந்துவீச்சில் எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து 114 ரன்னுக்கு 3 விக்கெட்டை பறிகொடுத்து திணறியது. அடுத்து கான்வேயுடன் ஹென்றி நிகோல்ஸ் இணைந்தார். இருவரும் பொறுமையாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். 91 பந்தில் அரை சதம் அடித்து அசத்திய கான்வே, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசி. ரன் குவிப்புக்கு உதவினார். ஒரு முனையில் நிகோல்ஸ் நங்கூரம் பாய்ச்சி நிற்க, அபாரமாக விளையாடிய கான்வே தனது முதல் டெஸ்ட் இன்னிங்சிலேயே சதம் விளாசி சாதனை படைத்தார். அவர் ராபின்சன் வீசிய 61வது ஓவரின் 2வது பந்தை பவுண்டரியாக விளாசி சதத்தை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது (163 பந்து, 11 பவுண்டரி). நியூசிலாந்து அணி 61 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்திருந்தது. கான்வே 103 ரன், நிகோல்ஸ் 19 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.   



Tags : Conway ,Zealand , Debutant Conway wacky New Zealand sober game
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...