×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் கசட்கினா: அலெக்சாண்டர் முன்னேற்றம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, ரஷ்ய வீராங்கனை டாரியா கசட்கினா தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் சுவிஸ் நட்சத்திரம் பெலிண்டா பென்சிக்குடன் (24 வயது, 11வது ரேங்க்) நேற்று மோதிய கசட்கினா (24 வயது, 37வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-2, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வெற்றி பெற்றார். இப்போட்டி 1 மணி, 16 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு 2வது சுற்றில் உள்ளூர் வீராங்கனை கரோலின் கார்சியாவை எதிர்கொண்ட போலோனா ஹெர்காக் (ஸ்லோவேனியா) 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். செக் குடியரசின் மார்கெடா வோண்ட்ருசோவா, கேதரினா சினியகோவா, ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டீ, பவுலா படோசா (ஸ்பெயின்), டேனியல் கோலின்ஸ் (அமெரிக்கா), தாமரா ஜிடான்செக் (ஸ்லோவேனியா) ஆகியோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

வீனஸ் - காப் ஏமாற்றம்: மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று களமிறங்கிய அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் (40 வயது) கோகோ காப் (17 வயது) ஜோடி 7-6 (7-5), 4-6, 3-6 என்ற செட் கனக்கில் எலன் பெரஸ் (ஆஸி.) - சாய்சாய் ஸெங் (சீனா) ஜோடியிடம் போராடி தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறியது. அந்துஜார் அவுட்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயினின் பாப்லோ அந்துஜார் 6-4, 1-6, 6-3, 3-6, 2-6 என 5 செட்களில் பெடரிகோ டெல்போனிசிடம் (அர்ஜென்டினா) தோல்வியைத் தழுவினார். 4வது ரேங்க் வீரர் டொமினிக் தீம் முதல் சுற்றில் இவரிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி, 6வது ரேங்க்) தனது 2வது சுற்றில் ரஷ்யாவின் ரோமன் சபியுல்லினை (182வது ரேங்) 7-6 (7-4), 6-3, 7-6 (7-1) என்ற நேர் செட்களில் 2 மணி, 27 நிமிடம் போராடி வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரர்கள் ஜான் ஐஸ்னர் (அமெரிக்கா), கேஸ்பர் ரூட் (நார்வே), பேபியோ பாக்னினி (இத்தாலி), ஹென்றி லாக்சோனன் (சுவிஸ்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

விலகினார் குவித்தோவா: செக் குடியரசு வீராங்கனை பெத்ரா குவித்தோவா (11வது ரேங்க்) தனது முதல் சுற்றில் கிரீட் மின்னெனை வீழ்த்திய பிறகு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்க சென்றபோது தடுக்கி விழுந்ததில் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, நடப்பு பிரெஞ்ச் ஓபன் தொடரில் இருந்து விலகுவதாக குவித்தோவா அறிவித்துள்ளார். இதனால் 2வது சுற்றில் அவருடன் மோதவிருந்த எலினா வெஸ்னினா நேரடியாக 3வது சுற்றுக்கு முன்னேறினார்.



Tags : Kasatkina ,French Open ,Alexander , Kasatkina in the 3rd round of the French Open tennis: Alexander progress
× RELATED 16 தாசில்தார்கள் மீதான ஒரு மாதம் சிறை தண்டனைக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு