×

கொரோனா அதிகம் பாதித்த சேலம், கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு: தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர்  மு.க.ஸ்டாலின் இன்று சேலம், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு  நேரடியாக சென்று ஆய்வு செய்கிறார். நாளை மதுரை மற்றும் திருச்சி  மாவட்டங்களுக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இன்று  திருப்பூரில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி திட்டத்தையும்  முதல்வர் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை  தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த வாரம்  வரை சென்னையில் கொரேனா தொற்று பாதிப்பு தினசரி அதிகரித்து வந்தது. தமிழக  அரசின் ஊரடங்கு மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நோய் தொற்று குறைந்து  வருகிறது. அதன்படி சென்னையில் தினசரி தொற்று 7,500ல் இருந்து தற்போது 6  ஆயிரமாக குறைந்துள்ளது. சென்னை அடுத்து கோவையில் நோய் பாதிப்பு தினசரி 3  ஆயிரமாக உள்ளது. அடுத்து செங்கல்பட்டு, ஈரோடு, மதுரை, திருச்சி,  திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர் உட்பட 10க்கும் மேற்பட்ட  மாவட்டங்களில் தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்து வருகிறது.அதன்  அடிப்படையில் கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில்  கடும் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் எடுக்கப்பட்ட  கட்டுப்பாடுகளை போன்று மற்ற மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள்  அதிகரித்தால் தொற்று குறைய வாய்ப்புள்ளது என்று பொதுமக்கள்,  மருத்துவர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவலை  கட்டுப்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக  பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து  வருகிறார். ஒவ்வொரு துறை அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனையும்  நடத்தி வருகிறார். கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் உடனடியாக  படுக்கைகள் கிடைப்பது, ஆக்சிஜன் தட்டுப்பாடுகளை போக்கவும்,  ரெம்டெசிவிர் மருந்துகள் தனியார் மருத்துவமனைகளே ஆன்லைன் மூலம்  பெற்றுக்கொள்ளும் வசதி, அனைவருக்கும் தடுப்பூசிகள் போடுவதற்காக  உலகளாவிய டெண்டர் விடப்பட்டு தடுப்பூசி கிடைக்கும் வகையிலும்   நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை  வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரவும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில்,  கட்டுப்பாட்டு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கவனிக்க தனித்தனி  ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும்  புறநகர் பகுதிகளில் அமைச்சர்கள் தினசரி மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு  செய்யவும் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், கொரோனா தொற்று அதிகம் உள்ள  சேலம், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு  நேரடியாக சென்று ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.  அதன் அடிப்படையில் இன்றும், நாளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கொரோனா  தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். அதன்படி, இன்று காலை 8.30  மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம்  புறப்பட்டு செல்கிறார். சேலம் இரும்பாலை வளாகத்தில் புதிதாக  அமைக்கப்பட்டுள்ள 500 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு  மருத்துவமனையை நேரில் சென்று ஆய்வு செய்வதுடன் மாவட்ட கலெக்டர் மற்றும்  சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறார். பின்னர் 12.15 மணிக்கு  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி ஜவுளி பூங்காவில் 18 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி  வைக்கிறார். பின்னர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அங்கிருந்து கார்  மூலம் கோவை கொடிசியா சென்று, அங்கு மாவட்ட கலெக்டர்கள் மற்றும்  அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.  அங்கிருந்து குமரகுரு கல்லூரி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை  மற்றும் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து கோவை விமான  நிலையம் சென்று இரவு 8 மணிக்கு மதுரை செல்லும் முதல்வர், இரவு மதுரையில்  விருந்தினர் இல்லத்தில் தங்குகிறார்.2வது நாளாக நாளை (21ம் தேதி) காலை  9.45 மணிக்கு மதுரை விருந்தினர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு மதுரை  கலெக்டர் அலுவலகம் செல்கிறார். அங்கு மாவட்ட கலெக்டர் மற்றும் உயர்  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் காலை 11 மணிக்கு தோப்பூர்  மருத்துவமனைக்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்வதுடன்,  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அங்கிருந்து கார் மூலம் திருச்சி  செல்லும் முதல்வர், நாளை மாலை 5.10 மணிக்கு திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.  பின்னர் என்ஐடி கல்லூரியில் ஆய்வு நடத்துகிறார். நாளை மாலை 6.15 மணிக்கு பத்திரிகையாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின்  சந்திக்கிறார். இதையடுத்து இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை  இரவு 8.15 மணிக்கு சென்னை திரும்புகிறார்.முதல்வர் மு.க.ஸ்டாலின்  2நாள் பயணமாக இன்றும, நாளையும் 5 மாவட்டங்களுக்கு செல்லும்போது, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ உயர் அதிகாரிகள்,  வருவாய் துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த  திட்டமிட்டுள்ளார். அப்போது, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கூடுதலாக  எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கை தீவிரமாக பின்பற்றுவதன்  அவசியம், பொதுமக்கள் வெளியில் வரும்போது மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை  பின்பற்றுவது உள்ளிட்டவைகளை கண்காணிப்பது என பல்வேறு விஷயங்கள் குறித்து  ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்த ஆலோசனையின்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். தமிழக  முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, முதன் முறையாக கொரோனா தொற்று  பரவல் தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்த பல்வேறு மாவட்டங்களுக்கு  நேரடியாக சென்று ஆய்வு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று  ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக நாளை பத்திரிகையாளர்களை முதல்வர்  மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.* இன்று காலை 10 மணிக்கு சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்கிறார். * பின்னர் 12.15 மணிக்கு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி ஜவுளி பூங்காவில் 18 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். * அங்கிருந்து கார்  மூலம் கோவை கொடிசியா சென்று, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.* நாளை மதுரை தோப்பூர் மருத்துவமனைக்கும் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்….

The post கொரோனா அதிகம் பாதித்த சேலம், கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு: தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Salem, Tema ,Corona ,G.K. Stalin ,Chennai ,the CM ,Salem ,Tiruppur, Goa ,Salem, ,Tema ,Chief of the CM ,B.C. ,Dinakaran ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...