×

பேக்கேஜ் டெண்டர் ரத்து, இணையவழி ஒப்பந்த நடைமுறையில் மாற்றம் தமிழக நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தில் சீர்திருத்தம்: பொறியாளர் சங்கம் அமைச்சரிடம் மனு

சென்னை: பேக்கேஜ் டெண்டர் ரத்து, இணையவழி ஒப்பந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரவும், தமிழக நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தில் சீர்திருத்தம் கொண்டு வரவும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கம் சார்பில் அமைச்சர் எ.வ.வேலுவிடம் மனு அளித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்க தலைவர் கண்ணன், பொதுச்செயலாளர் தீபக் ஆகியோர் பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவை தலைமை செயலகத்தில் சந்தித்து அளித்த மனு:

* கலைஞர் தலைமையிலான ஆட்சியில் 2010ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நெடுஞ்சாலைத்துறை நிர்வாக சீர்திருத்தங்களுக்குப் பின் எந்த சீர்திருத்த நடவடிக்கையும் இன்றி 10 ஆண்டுகளாக துறை இயங்கி வருகிறது. நிர்வாகக் கட்டமைப்பினை வலுப்படுத்தும் வகையில் தேர்ந்த வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

* கடந்த 2010ம் ஆண்டு பொறியாளர்களுக்கு மற்ற தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்திற்கு இணையான ஊதியத்தை வழங்கி முன்னாள் முதல்வர் கலைஞர் ஆணையிட்டார். அதன்பின்னர், அமைந்த அரசு 2013ம் ஆண்டு பொறியாளர்களின் ஊதியத்தை முற்றிலுமாக குறைத்து ஆணையிட்டது. எனவே முன்னாள் முதல்வர் கலைஞர் வழங்கிய ஊதியத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் குழுமம், தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் ஆகிய நிறுவனங்கள் புதிய சாலைப் பணிகளை நிறைவேற்றுவதில் நெடுஞ்சாலைத் துறைக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்டன. இந்த நிறுவனங்களில் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பணியில் உள்ள பொறியாளர்கள் விரைவாக முடித்துக் கொண்டுதான் உள்ளனர். பணியில் இருப்பவர்கள் ஏதேனும் தவறு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கிட இயலும். எனவே, இந்த நிறுவனங்களில் பணியாற்றும் வயது முதிர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர்களை விடுவித்து துறையில் பணிபுரிவோரை நியமனம் செய்ய வேண்டும்.

* இன்று நடைமுறையில் உள்ள பணிமாறுதல் விதிகள் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்டது. கால மாற்றத்திற்கு ஏற்றவாறு விதிகளில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. எனவே, இதனை களைந்து நெடுஞ்சாலைத்துறை பொறியியலில் சிறந்த வல்லுநர்களை உருவாக்கும் வகையிலும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பணி மாறுதல்கள் நடைபெற வேண்டும்.

* தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் ஓரிரு ஒப்பந்ததாரர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது பேக்கேஜ் முறையில் ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. ஒரு ஒப்பந்ததாரரே பல பணிகளை செய்யும்போது குறித்த காலத்தில் பணிகள் முடிக்கப்படுவதில்லை. பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் இடையே ஆரோக்கியமான போட்டி தவிர்க்கப்படுகிற காரணத்தால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த முறைகளை ரத்து செய்ய வேண்டும்.

* இன்று பெயரளவில் உள்ள இணைய வழி ஒப்பந்தப்புள்ளி கோரும் நடைமுறையை வெளிப்படைத்தன்மையுடன் முழுமையாக இணைய வழியில் ஒப்பந்தப்புள்ளி கோரும் நடைமுறையாக மாற்றியமைக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் இன்று 1 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை குறைவாக எடுக்கப்படும் ஒப்பந்தங்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் உள்ளதுபோல் 20 சதவீதம் வரை குறைவாக வேலைகளை எடுப்பதற்கு ஒப்பந்தக்காரர்கள் முன்வருவார்கள். அதனால், அரசுக்கு 20 சதவீதம் வரை நிதிச்சுமை குறையும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Tamil Nadu Highways Administration ,Minister of Engineers Association , Package tender cancellation, change in e-contracting practices Reform in Tamil Nadu Highways Administration: Petition to the Minister of Engineers Association
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...