×

10 கொலை, 9 கொலை முயற்சி உட்பட 32க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடையவர் போலீசாரை சுட்டு தப்பிக்க முயன்ற பிரபல தாதா சி.டி.மணி அதிரடி கைது

* துப்பாக்கி சூட்டில் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்
* சினிமா காட்சி போல் போரூர் மேம்பாலத்தில் பரபரப்பு

சென்னை:  போலீசாரை சுட்டு தப்ப முயன்ற பிரபல தாதா சிடி மணியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். துப்பாக்கி சூட்டில் எஸ்.ஐ. ஒருவர்  படுகாயமடைந்தார். சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணி(எ) சிடி மணி(38). சிடி கடை நடத்தி வந்த இவர், தேனாம்பேட்டை பகுதியில் ரவுடியாக உருவெடுத்த சிடி மணி மீது 10 கொலை, 9 கொலை முயற்சி, ஆள்கடத்தல் உட்பட 32க்கும் வழக்குகள் உள்ளன. தென் சென்னையின் பிரபல ரவுடியாக உருவான சிடி மணி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் கொடி கட்டி பறந்தார். தென் சென்னை பகுதிகளில் உள்ள காலி இடங்களை உரிமையாளர்களை மிரட்டி எழுதி வாங்கி பல கோடிக்கு விற்பனை செய்து வந்தார். பிறகு பிரபல ரவுடி திண்டுக்கல் பாண்டியனுடன் சேர்ந்து தமிழகம் முழுவதும் தனது ரவுடி சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தினார்.

பின்னர் திண்டுக்கல் ரவுடி பாண்டியன் இறந்த பிறகு, தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் கட்சி பிரமுகர்கள், உயர் காவல் துறை அதிகாரிகளுடன்  நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டு, சென்னையில் பிரபல தாதாவாக சிடி மணி உருவெடுத்தான். வட சென்னை ரவுடி காக்காதோப்பு பாலாஜிக்கும் சிடி மணிக்கும் இடையே  யார் பெரிய ரவுடி என்று போட்டி ஏற்பட்டது. ஆனால் சென்னையின் நிழல் உலக தாதா என்று அழைக்கப்படும் சம்பா செந்தில் மூலம் இவர்களுக்கு பிரச்னை வந்தது. அதாவது, துறைமுகத்தில் கப்பலில் இருந்து கள்ளத்தனமாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வதில் பிரச்னை இருந்து வந்தது. இதனால் சம்பா செந்திலை கொலை செய்ய வடசென்னை ரவுடி காக்காதோப்பு பாலாஜி மற்றும் தென் சென்னை ரவுடி சிடி மணியும் இணைந்து முடிவு செய்து பல வகையில் முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் சம்பா செந்திலை நெருங்க முடியவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த தாதா சம்பா செந்தில் தனது பணம் மற்றும் ஆட்கள் பலத்தை வைத்து காக்காதோப்பு பாலாஜி மற்றும் சிடி மணியை கொலை ெசய்ய பல வகையில்  முயன்றார். கடந்த ஆண்டு காக்காதோப்பு பாலாஜி பாரிமுறையில் உள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு தனது நண்பர் சிடிமணியுடன் காரில் வந்தார். அப்போது சம்பா ெசந்தில் ஆட்கள் அந்த காரை பின் தொடர்ந்து அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரம் அருகே சிடி மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜி வந்த கார் மீது நாட்டு வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் சிடி மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் சாதுரியமாக தப்பிவிட்டனர். இதைதொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த சிடி மணி திரைமறைவில் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்துள்ளார்.

சென்னையில் தற்போது அதிமுக மாவட்டச் செயலாளராக உள்ளவரும், முன்னாள் எம்எல்ஏவுமான விஐபி உதவியுடன் கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்தான். இதற்கிடையே சிடி மணி மீது கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் படி தலைமறைவாக இருந்து வந்த தாதா சிடி மணியை கேளம்பாக்கம் போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் நொளம்பூர் அருகே சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் சிடி மணியை அழைத்து வரும் போது போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்படி கூடுதல் கமிஷனர் கண்ணன் உத்தரவுப்படி தாதா சிடிமணியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் வளசரவாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது.

அதை தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று மதியம் வளசரவாக்கம் பகுதிக்கு சென்று சிடி மணியை பிடிக்க முயன்றனர். ஆனால் அவன் அங்கிருந்து தப்பி எஸ்ஆர்எம்சி காவல் நிலையம் அருகே உள்ள போரூர் ரவுண்டனா வழியாக காரில் செல்ல முயன்றான். அதே சமயம் வேகமாக செயல்பட்ட  தனிப்படை போலீசார் சிடி மணியை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். ஆனால் தாதா சிடி மணி தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தனிப்படை போலீசார் மீது 2 ரவுண்ட் சுட்டுவிட்டு ரவுண்டானா மீது இருந்து குதித்து தப்பிக்க முயன்றார். சிடி மணி துப்பாக்கியால் சுட்டத்தில் தனிப்படையில் இருந்த உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் காலில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார். காவலர் ஒருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மேம்பாலத்தில் இருந்து விழுந்த சிடி மணி படுகாயங்களுடன் தப்பித்து ஓட முடியாத நிலையில் போராடினார். உடனே தனிப்படை போலீசார் சிடி மணியை கைது செய்தனர்.

குண்டு காயமடைந்த உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் படுகாயடைந்த தாதா சிடி மணியை போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் போரூர் மேம்பாலத்தில் சினிமா பாணியில் போலீசார் மீது தாதா சிடி மணி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் மீது சிடி மணி துப்பாக்கி சுடு நடத்தியும் போலீசார் அவன் என்கவுன்டர் செய்யாமல் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் முன்னாள் எம்எல்ஏவுடன் சேர்ந்து ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : CD ,Mani , Celebrity Dada CD Mani arrested for attempting to shoot police
× RELATED சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள...