×

கருவறையில் ஓட்டுக்கூரை சேதமடைந்தது மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பயங்கர தீ விபத்து

குளச்சல்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கருவறையில் தீ பிடித்து எரிந்ததால் ஓட்டுக்கூரை சேதம் அடைந்தது. குமரி மாவட்டம் மண்டைக்காட்டில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு அம்மன் புற்றுவடிவில் உள்ளார். முழுக்க மரத்தடிகளுடன் ஓடு வேய்ந்த மேற்கூரை உள்ளது. 15 அடி உயரத்திற்கு மேல் மேற்கூரையை தொட்ட வண்ணம்  புற்று பகுதியில் அம்மன் தலை பகுதி உள்ளது. இக்கோயிலில் கணபதி, நாகர், பைரவர் உள்ளிட்டோருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. கேரளா  பக்தர்கள் இருமுடி கட்டி இக்கோயிலில் வழிபாடு நடத்த வருவது வழக்கம். இதனால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. வழக்கமாக காலை 5 முதல்  10 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவது  இல்லை. தினசரி பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு நடை சாத்தப்படும். நேற்று காலை  5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. காலை 6.45 மணிக்கு தீபாராதனை முடிந்து பூஜாரிகள் வெளியே வந்தனர். வெளியே சாலையில் நின்று பக்தர் ஒருவர் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது கோயில் கருவறை மேற்கூரையில் குபுகுபுவென்று கரும் புகை வருவதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்து   கூச்சலிட்டார். சிறிது நேரத்தில் மேற்கூரையில் தீ மேலும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. ஓடுகள் சரிந்து விழுந்தன. அம்மன் சொரூபத்தில் அலங்காரத்திற்கு போடப்பட்டிருந்த பட்டுகள் கருகி சாம்பலாகின. கருவறை முழுவதும் புகைமூட்டத்துடன் காணப்பட்டது. உள்ளே இருந்த பொருட்களும் எரிந்தன.  

தகவலறிந்து குளச்சல் தீயணைப்பு துறையினர் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தொடர்ந்து சன்னதி பகுதியை குளிர்விக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் மரத்தினால் ஆன மேற்கூரை ஒரு பகுதி முற்றிலும் சாம்பலானது. அம்மனுக்கு சார்த்தப்படும் பட்டுகள் கோயில் கருவறையில் பகுதியில் சேகரித்து வைத்திருந்தனர். அவையும் எரிந்து சாம்பலானது. கருவறையில் இருந்த அம்மனின் வெள்ளியிலான சிலையும் வெப்பத்தால் கருகியது. தகவல் அறிந்து சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் திரண்டனர். அவர்கள் கருவறையில் இருந்து எரியாத பட்டு துணிகள், தீ பிடிக்காத பொருட்களை சேகரித்து வெளியே கொண்டு வந்தனர். கோயில் கருவறை பகுதியை சுத்தப்படுத்தினர்.  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், எம்.பி.க்கள் விஜய்வசந்த், விஜயகுமார் உள்ளிட்டோர் வந்து பார்வையிட்டனர்.

ஐகோர்ட் கிளையில் முறையீடு: ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் நேற்று  வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது திருத்ெதாண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, அம்மன் கோயில் தீ விபத்து குறித்து ஐகோர்ட் கிளை தாமாக முன்வந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். நீதிபதிகள், இந்த கோரிக்கை குறித்து பார்த்துக் கொள்வதாக கூறினர்.

தீ விபத்து ஏற்பட்டது எப்படி?
கோயிலில் கருவறை பகுதியில் மின் இணைப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. கோயிலில் தீபாராதனை முடிந்த பின்னர் கற்பூர தட்டுகளில் தீ அணைக்கப்பட்டு விடும். அதே வேளையில் 2 தூக்கு விளக்குகள் எரிந்துகொண்டு இருக்கும். அதில் இருந்து காற்றில் அம்மன் மீது சார்த்தப்பட்டு இருக்கும் பட்டுத்துணியில்  தீ பிடித்து எரிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Tags : Mandakkadu Bhagwati Amman temple , The roof of the sanctum sanctorum was damaged in a terrible fire accident at the Mandakkadu Bhagwati Amman temple
× RELATED மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில்...