×

ஆத்தூர் அருகே போலீஸ் இன்பார்மர் எனக்கூறி வாலிபர், கர்ப்பிணி மனைவியை தாக்கி 10 லட்சம் அபராதம் விதிப்பு: கள்ளச்சாராய விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து

ஆத்தூர்: ஆத்தூர் அருகே கள்ளச்சாராய விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து பேசிய ஊர் பிரமுகர்கள், போலீஸ் இன்பார்மர் எனக்கூறி வாலிபர் மற்றும் அவரது கர்ப்பிணி மனைவியை தாக்கி 10 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரங்களையொட்டி கல்வராயன் மலை உள்ளது. இது விழுப்புரம் மாவட்டம் வரை நீண்டுள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் உள்ள கல்வராயன் மலை கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி எடுத்து வந்து சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சப்ளை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, சேலம் மாவட்ட போலீசார் மலையை ஒட்டியுள்ள அனைத்து கிராமங்களிலும், வனப்பகுதிகளிலும் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆத்தூர் ஒன்றியம் கல்லாநத்தம் கிராமம் முட்டல் வனப்பகுதியில் ஆத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, டூவீலர்களில் வந்த 4 பேர், போலீசாரை கண்டதும் டூவீலரை அப்படியே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். போலீசாரின் சோதனையில் டூவீலரில் கள்ளச்சாராயம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 500 லிட்டர் சாராயத்துடன் டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய பட்டிவளவு பகுதியைச் சேர்ந்த 4 பேரை தேடி வந்தனர். இந்நிலையில், பட்டிவளவு பகுதியைச் சேர்ந்த ராஜா(31) என்பவர் தனது கர்ப்பிணி மனைவி அனிதா(22)வுடன் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று சிகிச்சைக்காக வந்தார். அவர், பட்டிவளவு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி கடத்திச்சென்று விற்பனை செய்து வரும் கும்பல் தங்களை தாக்கி விட்டதாக டாக்டர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஜா கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு எங்கள் கிராமத்தைச் சேர்ந்த கள்ளச்சாராய கடத்தல்காரர்களின் 4 வாகனங்களையும், சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கு நான் தான் காரணம் எனவும், சாராயம் காய்ச்சுதல் மற்றும் கடத்தல் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததாக கூறி என்னையும், 8 மாத கர்ப்பிணியான எனது மனைவியையும் எங்கள் ஊரைச் சேர்ந்த 3 பேர் கடுமையாக தாக்கினர். மேலும், கட்டப்பஞ்சாயத்து பேசினர். அதில், சாராயம் கடத்தல் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததற்காகவும், 4 டூவீலர்களை போலீசார் கைப்பற்றியதற்காகவும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதாக தெரிவித்தனர். அபராத தொகையை செலுத்தாவிட்டால் உன் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்போம் எனக் கூறி மிரட்டல் விடுத்தனர். கர்ப்பிணி என்றும் பார்க்காமல் எனது மனைவியையும், என்னையும் சரமாரி தாக்கினர். இதனால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளோம். என்றார். இது குறித்து சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தகவல் தரப்பட்டு அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

Tags : Valipar ,Attur , 10 lakh fine for assaulting a pregnant woman and a police informer near Attur:
× RELATED பரனூர், ஆத்தூர் உட்பட 29...