×

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி கடிதம்

சென்னை: செங்கல்பட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு மையத்தை தடுப்பூசி  தயாரிப்பதற்காக தமிழகத்திடம் ஒப்படைப்பது குறித்து நிலைக்குழுவை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.மாநிலங்களவை திமுக உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மத்திய அறிவியல், தொழிநுட்பம் மற்றும் வன நிலைக்குழு தலைவர் ஜெய்ராம் ரமேசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று தினமும் நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தடுப்பூசிகளின் எண்ணிக்கை மிக அதிகம் தேவை. இதை சமாளிக்க மேலும் பல தடுப்பூசி தயாரிப்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

செங்கல்பட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு மையத்தை (எச்.எல்.எல்) தமிழகத்திடம் ஒப்படைத்தால் தடுப்பூசி தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை பெற்று கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் ஏற்கனவே கோரியுள்ளார். இங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்திய மாநிலங்களும் பயன்படுத்த முடியும். எனவே, இது குறித்து ஆலோசனை நடத்தி உரிய முடிவை எடுக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக மத்திய அறிவியல், தொழிநுட்பம் மற்றும் வன நிலைக்குழுவை கூட்டி ஆலோசிக்குமாறு கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chengalpattu Vaccine Center ,Government of Tamil Nadu ,DMK ,MP RS Bharathi ,Central Government , Chengalpattu Vaccine Center should be handed over to Tamil Nadu Government: DMK MP RS Bharathi's letter to Central Government
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...