×

கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு 5 திட்டங்களை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: ரேஷன் கடைகளில் 14 மளிகை பொருட்கள்:கொரோனா நிதி 2000

* தொற்றால் பலியான டாக்டர், போலீசாருக்கு 25 லட்சம், பத்திரிகையாளர்களுக்கு 10 லட்சம்
* அர்ச்சகர்களுக்கு 4000
* உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்ட பயனாளிகள் 10 பேருக்கு அரசு பயன்களை இன்று வழங்குகிறார்

சென்னை: கலைஞரின் பிறந்தநாளையொட்டி, கொரோனா பாதிப்பு நிவாரண நிதியுதவியான அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 2.8 கோடி பேருக்கு தலா ரூ.2 ஆயிரம், 14 வகையான இலவச மளிகை பொருட்கள் மற்றும் கோயில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை, கொரோனா நோய் தொற்றால் இறந்த பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், மருத்துவர், மருத்துவ பணியாளர், காவலர்களுக்கு ரூ.25 லட்சம் உள்ளிட்ட 5 நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். திமுக தேர்தல் வாக்குறுதியாக, கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து தேர்தலில் வெற்றிபெற்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 7ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்றதும், கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்  தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலமாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் சுமார் 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்க ரூ.4153.39 கோடி  நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து ரேஷன் கடைகள் மூலம் கடந்த 12ம் தேதியில் இருந்து தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி நடைபெற்றது. ஒருவர்கூட விடுபடாமல் கொரோனா நிவாரண நிதியை வாங்க வேண்டும் என்பதற்காக ஜூன் மாதம் இறுதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மறைந்த தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 97வது பிறந்த நாள் இன்று திமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. கலைஞரின் பிறந்தநாளை யொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை சென்னை, தலைமை செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்கிறார். அதன்படி,
* கொரோனா நோய்த்தொற்று  நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 2வது தவணையாக 2 ஆயிரம் வழங்குதல்.
* கொரோனா பாதிப்பு நிவாரண உதவியாக 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கும் நிகழ்ச்சி.
* தமிழ்நாடு அரசு அறநிலைய துறையின் கீழ் ஒருகால பூஜையுடன் இயங்கும் 12,959 கோயில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியாக ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 13 வகை மளிகை பொருட்கள் வழங்குதல்.
* கொரோனா நோய் தொற்றால் இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், மருத்துவர், மருத்துவ பணியாளர், காவலர் மற்றும் நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம்.
* உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்ட பயனாளிகள் 10 பேருக்கு அரசு பயன்களை வழங்குதல் ஆகிய உதவி திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

முதல்வர் இன்று தொடங்கி வைக்கயுள்ள 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பைகள், தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் சுமார் 2.8 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் கிடைக்க தமிழக அரசு  சிறப்பான ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக  டோக்கன் வழங்கியுள்ளனர். தினசரி 200 பேருக்கு வருகிற 5ம் தேதி  முதல் ரேஷன் கடைகளில் இந்த நிவாரண உதவிகள் கிடைக்கும். இதற்காக கடந்த சில நாட்களாக மளிகை பொருட்களை பேக்கிங் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி நாளை வரை நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் தவறாது அவற்றை பெற்றுக் கொள்ளவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

14 வகையான பொருட்கள் எவை?
கோதுமை மாவு    1 கிலோ
உப்பு        1 கிலோ
ரவை        1 கிலோ
சர்க்கரை        அரை கிலோ
உளுத்தம் பருப்பு    500 கிராம்
புளி        250 கிராம்
கடலை பருப்பு    250 கிராம்
கடுகு        100 கிராம்
சீரகம்        100 கிராம்
மஞ்சள் தூள்    100 கிராம்
மிளகாய் தூள்    100 கிராம்
டீ தூள்        2 (100 கிராம்)
குளியல் சோப்பு    1 (125 கிராம்)
துணி சோப்பு    1 (250 கிராம்)

Tags : Chief Minister ,MK Stalin ,Corona Fund 2000 , Chief Minister MK Stalin launches 5 projects on artist's birthday: 14 groceries in ration shops: Corona Fund 2000
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...