மதுரை ஆம்னி பஸ் நிலையத்தில் தற்காலிக பூ மார்க்கெட்: விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலைய மைதானத்தில் தற்காலிக பூ மார்க்கெட் இன்று இயங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக பூ உற்பத்தி செய்யும் விவசாயிகள், பூக்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்தனர். இதனால், கடந்த ஆண்டு கொரோனா காலத்தில், ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பூ வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டது. ஓரிரு வாரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில்,  பின்பு மாட்டுத்தாவணி ரோட்டில் இருபுறமும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டனர். தற்போது 2வது அலையின் போது, ஆரம்பத்தில், மாட்டுத்தாவணியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விற்பனை மைய வளாகத்தில் உள்ள பூ மார்க்கெட் வழக்கம் போல் இயங்கியது.

தொற்று அதிகரித்ததால், கடந்த மாதம் 14ம் தேதி முதல் முழுமையாக மார்க்கெட் மூடப்பட்டது. இதனால், பூ உற்பத்தி செய்த விவசாயிகள் பூக்களை  விற்பனை செய்ய முடியாமல் தவித்தனர். காய்கறி விற்பனை செய்வது போல், பூக்களை விற்பனை இடம் ஒதுக்கீடு செய்துதருமாறு அமைச்சர் மூர்த்தியிடம், பூ விவசாயிகள், வியாபாரிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சமூக இடைவெளியுடன்,  கூட்டம் இல்லாமல் பூக்கள் விற்பனை செய்ய ஆம்னி பஸ் நிலையத்தில் மையப்பகுதியில் உள்ள காலி மைதானத்தை தேர்வு செய்து பூக்கள் விற்பனை செய்ய தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டது.

தொடர்ந்து இன்று காலை, ஆம்னி பஸ் நிலைய காலி மைதானத்தில் பூ மார்க்கெட் இயங்க துவங்கியது. சமூக இடைவெளியுடன், கடைகள் அமைக்கப்பட்டது. நுழைவு வாயிலில் பூக்கள் வாங்க வரும் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும்  சானிடைசர் தெளிக்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து வருவோருக்கு பூக்கள் விற்பனை செய்தனர். சமூக இடைவெளியுடன், பொதுமக்களுக்கு இடையூறின்றி வியாபாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், கடந்த 15 நாட்களுக்கு பின் பூ மார்க்கெட் மீண்டும் இயங்க துவங்கியதால், பூ விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

>