2027,2031 ஆண்டு நடைபெறும்; 50 ஓவர் உலக கோப்பையில் 14 அணிகள் பங்கேற்பு: 8 ஆண்டுக்கு பின் 2025ல் சாம்பியன் டிராபி

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் 2024ம் ஆண்டு முதல்  2031ம் ஆண்டு வரையிலான 8 ஆண்டுகளுக்கான உலக கோப்பை போட்டி தொடர் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதில் 2 ஆண்டுக்கு ஒருமுறை டி.20 உலக கோப்பை தொடர் நடத்தப்பட உள்ளது. 2024 மற்றும் 2028ம் ஆண்டு ஆடவர் மற்றும் மகளிர் டி.20 உலக கோப்பை, 2025 மற்றும் 2029ம் ஆண்டுகளில் ஆடவர் சாம்பியன் டிராபி, டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல், மகளிர் 50 ஓவர் உலக கோப்பை தொடர், 2026, மற்றும் 2030ல் ஆடவர் மற்றும் மகளிர் டி.20 உலக கோப்பை, 2027 மற்றும் 31ம் ஆண்டுகளில் ஆடவர் 50 ஓவர் உலக கோப்பை, டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் மற்றும் மகளிர் டி.20 சாம்பியன் டிராபி ஆகியவை நடத்த முடிவு செய்யப்பட்டது.

2027, மற்றும் 2031ம் ஆண்டு ஆடவர் 50 ஓவர் உலக கோப்பையில் 14 அணிகள் விளையாடும். மொத்தம் 54 போட்டிகள் நடத்தப்படும். 14 அணிகளில் தலா 7 அணிகள் என இரு குழுவாக பிரிக்கப்படும். இரு பிரிவிலும் முதல் மூன்று இடம் பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் நிலைக்கு முன்னேறும். இதில் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். 2024,26,28 மற்றும் 2030ல் நடைபெறும் டி20 உலக கோப்பையில் 20 அணிகள் பங்கேற்கும். மொத்தம் 55 போட்டிகள் நடத்தப்படும். 20 அணிகளில் தலா 5 அணிகள் வீதம் 4 குழுவாக பிரிவிக்கப்படும். லீக்சுற்று முடிவில்   ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 பிரிவுக்கு தகுதிபெறும்.

இதில் 4 அணிகள் அரையிறுதிக்குள் நுழையும். 2025 மற்றும் 29ம் ஆண்டு நடைபெறும் சாம்பியன் டிராபி தொடரில் (50 ஓவர்) தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் விளையாடும். 8 அணிகள் இரு பிரிவாக  பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படும். இதில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். 8 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் டிராபி தொடர் வரும் 2025ம் ஆண்டுநடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>