×

தமிழில் பதவிப்பிரமாணம் செய்ததில் பிழை: தேவிகுளம் எம்எல்ஏவுக்கு மீண்டும் பதவிப்பிரமாணம்

திருவனந்தபுரம்: கேரளாவில் தமிழில் பதவிப்பிரமாணம் செய்ததில் பிழை ஏற்பட்டதால், தேவிகுளம் எம்எல்ஏ ராஜா இன்று மீண்டும் பதவியேற்று கொண்டார். கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு, தொடர்ந்து 2வது முறையாக வெற்றிபெற்று, கடந்த 20ம் தேதி பதவியேற்றது. 24ம் தேதி தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடரில் புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது மஞ்சேஸ்வரம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கன்னடத்திலும், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ராஜா தமிழிலும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

பதவிப்பிரமாணம் செய்யும்போது, தெய்வத்தின் பெயரால் அல்லது உளமாற என கூறித்தான் உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் ராஜா பதவியேற்கும்போது இந்த 2 வார்த்தைகளும் இடம் பெறவில்லை. பதவிப்பிரமாணம் செய்து முடித்த பின்னர்தான் இந்த விவரம் சட்டசபை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. கன்னடம் மற்றும் தமிழ் மொழிக்காக கேரள தலைமை செயலகத்தில் தனித்தனி துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த துறைகளில் இருந்துதான் தமிழில் அல்லது கன்னடத்தில் பதவி ஏற்கும் எம்எல்ஏக்களுக்கு தேவையான விவரங்கள் கொடுக்கப்படும். தமிழ்த்துறையில் இருந்து கொடுக்கப்பட்டதில் ஏற்பட்ட தவறுதான் இதற்கு காரணம் என்று தெரியவந்தது.

சட்டப்படி எம்எல்ஏ பதவி ஏற்கும்போது, தெய்வத்தின் பெயரால் அல்லது உளமாற என்ற வார்த்தைகளை கண்டிப்பாக கூற வேண்டும். இந்த இரண்டு வார்த்தைகளையும் பயன்படுத்தாததால் எம்எல்ஏ ராஜாவுக்கு மீண்டும் பதவிப்பிரமாணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை சபாநாயகர் ராஜேஷ் முன்னிலையில், ராஜா எம்எல்ஏவாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவர் ‘... உளமாற உறுதி கூறுகிறேன்’ என தமிழில் பதவியேற்று கொண்டார்.

Tags : Error in swearing in in Tamil: Swearing in again for Devikulam MLA
× RELATED பாஜகவில் இணைந்தவர்கள் மீதான...