மனித உரிமை ஆணையம் தலைவராக நீதிபதி மிஸ்ராவை நியமிக்க பரிந்துரை: மோடி தலைமையிலான கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி: தேசிய மனித உரிமை ஆணையத்தின் அடுத்த தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ராவை நியமிக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் கடந்த 1993ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையம் தலைவர் ஒருவரையும், 4 உறுப்பினர்களையும் கொண்டு செயல்படுகிறது. இதன் தலைவர் பொதுவாக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியாக இருப்பார்கள்.

மேலும், ஆணையத்தின் ஒரு உறுப்பினர் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியாகவும், மற்றொரு உறுப்பினர் உயர் மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியாகவும், மீதமுள்ள இரு உறுப்பினர்கள் மனித உரிமைகள் சார்ந்த செயல் அனுபவமிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களை ஜனாதிபதி நியமனம் செய்வார். இந்நிலையில், தேசிய மனித உரிமை ஆணையத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் எ.எல்.தத்துவின் பதவிக் காலம் முடிந்துள்ளது. இப்பதவிக்கு  உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் மூத்த நீதிபதி அருண் குமார் மிஸ்ரா தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இவரை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.

அதே போன்று, 2 புதிய உறுப்பினர்களை நியமிக்கவும் இக்குழு பரிந்துரை செய்துள்ளது. இக்குழுவின் பரிந்துரையை ஏற்று, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விரைவில்  இவர்களுக்கான நியமன அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

* கடந்த 1978ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்துக் கொண்ட நீதிபதி அருண் மிஸ்ரா, 1998-99ல் இந்திய பார் கவுன்சில் தலைவராகவும், 1999ம் ஆண்டு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இருந்துள்ளார்.

* ராஜஸ்தான், மேற்கு வங்க உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்தார்.

* 2014ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், கடந்தாண்டு செப்டம்பர் 3ம் தேதி ஓய்வு பெற்றார்.

Related Stories:

>