2வது சுற்றில் நம்பர் 1 ஆஷ்லி: போபண்ணா ஜோடி முன்னேற்றம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.) தகுதி பெற்றார். முதல் சுற்றில் அமெரிக்காவின் பெர்னார்டா பெராவுடன் (26 வயது, 70வது ரேங்க்) நேற்று மோதிய ஆஷ்லி பார்தி (25 வயது) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த பெர்னார்டா அதிரடியாக விளையாடி ஆஷ்லியின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்தார். அந்த செட்டை பெர்னார்டா 6-3 என கைப்பற்ற சமநிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட்டில் சுதாரித்துக் கொண்டு இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஷ்லி 6-4, 3-6, 6-2 என வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி நேரத்துக்கு நீடித்தது.

மற்றொரு முதல் சுற்றில் உக்ரைன் நட்சத்திரம் எலினா ஸ்விடோலினா (5வது ரேங்க்) 6-2, 7-5 என்ற நேர் செட்களில் உள்ளூர் வீராங்கனை ஒஷேன் பேபலை (17 வயது) வீழ்த்தி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். முன்னணி வீராங்கனைகள் கிறிஸ்டினா மிளாடெனோவிச் (பிரான்ஸ்), மரியா சக்கரி (கிரீஸ்), ஜெனிபர் பிராடி (அமெரிக்கா), ஆன் அலி (அமெரிக்கா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். முன்னதாக நேற்று முன்தினம், பிரெஞ்ச் ஓபனில் முதல் முறையாக நடந்த இரவு போட்டியில் அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் 7-6 (8-6), 6-2 என்ற நேர் செட்களில் ஐரினா பெகுவை (ருமேனியா) வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் கேல் மான்பில்ஸ் (34 வயது, 15வது ரேங்க்) 1-6, 7-6 (8-6), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஆல்பர்ட் ராமோஸ் வினோலாசை (ஸ்பெயின்) 3 மணி நேரம் போராடி வென்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று குரோஷியாவின் பிரான்கோ ஸ்குகோருடன் இணைந்து களமிறங்கிய இந்திய நட்சத்திரம் ரோகன் போபண்ணா 6-4, 6-2 என்ற நேர் செட்களில் நிகோலஸ் பாசிலாஷ்விலி (ஜார்ஜியா) - ஆந்த்ரே பெகிமான் (ஜெர்மனி) ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories:

>