×

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு விசாரணையை ஜூலை இறுதிக்குள் முடிக்க வேண்டும்: கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  சென்னையை சேர்ந்த பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கடந்த 2013ம் ஆண்டு சென்னை ஆர்.ஏ.புரத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அவரது மைத்துனர் மோகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் காவல்துறையினர், அரசு பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வக்கீல் பாசில்,  வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், இன்ஜினியர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐய்யப்பன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மே 31ம் தேதியுடன் ஓய்வு பெற்றுள்ளதால், வழக்கை முடிக்கும்வரை அவருக்கு பணிநீட்டிப்பு வழங்க வேண்டுமென மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ஏற்கனவே பல நீதிபதிகள் விசாரித்துள்ளனர். இந்த வழக்கை ஒரு மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும், என்று கடந்த மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவரை 57 சாட்சிகள், 176 ஆவணங்கள் மற்றும் 42 சான்று பொருட்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. இப்போது வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் பணிக்காலம் மே 31ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.

எனவே, இந்த வழக்கை புதிய நீதிபதி விசாரித்தால் மீண்டும் காலதாமதமாகும். இதுவரை வழக்கை விசாரித்த நீதிபதியை இந்த வழக்கை விசாரித்து முடித்துவைக்க ஏதுவாக அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட  வேண்டும், என்று கோரியிருந்தார். இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போது வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்ற நீதிபதி பணி ஓய்வு பெற்று விட்டதால் அவருக்கு பணி நீட்டிப்பு செய்ய வாய்ப்பு இல்லை.

எனவே, காலியாக உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கான பணியிடத்தை 15 நாட்களுக்குள் உயர் நீதிமன்ற பதிவாளர் நிரப்ப வேண்டும். புதிதாக நியமிக்கப்படும் நீதிபதி இந்த வழக்கை தினசரி  விசாரித்து, வரும் ஜூலை இறுதிக்குள் வழக்ைக விசாரித்து முடிக்க வேண்டும், என்று உத்தரவிட்டனர்.

Tags : Dr ,Subbaiah , Dr. Subbaiah murder trial to be completed by end of July: ICC orders additional session court
× RELATED விட்டு விடுதலையாகுங்கள்…புற்றுநோய்க்குப் பிறகான பராமரிப்பு!