குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்த நடிகை சாந்தினி திட்டம்: அதிமுக மாஜி அமைச்சர் மணிகண்டன் மனைவி எஸ்பியிடம் புகார்

ராமநாதபுரம்: குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்த திட்டமிடும் நடிகை சாந்தினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனின் மனைவி ராமநாதபுரம் எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த 29ம் தேதி பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அடையாறு போலீசார் பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி, அடித்து காயம் ஏற்படுத்துதல், பெண்ணின் அனுமதியின்றி கட்டாயப்படுத்தி கரு கலைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தற்போது தலைமறைவாக உள்ள அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். அவரது சொந்த ஊரான ராமநாதபுரம், தற்போது அவர் வசித்து வரும் மதுரை அண்ணா நகரில் உள்ள வீடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக் தலைமையில் போலீசார் மணிகண்டனின் குடும்பத்தினரிடமும், அவரது உறவினர்களிடமும் விசாரித்தனர். இதற்கிடையே மணிகண்டன் மனைவி வசந்தி, நேற்று ராமநாதபுரம் எஸ்.பி கார்த்திக்கிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அதில், ‘என் கணவர் மீது நடிகை சாந்தினி கொடுத்த அவதூறு புகாரால் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளேன்.

என் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்த நடிகை திட்டமிட்டுள்ளார். நடிகை உட்பட இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார். இந்த மனு சென்னை அனுப்பப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மணிகண்டன் தலைமறைவான நிலையில், ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ள அவரது தந்தை, உறவினர்கள், நண்பர்களின் வீடுகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். மணிகண்டனின் தந்தையும், மாவட்ட அதிமுக அவைத்தலைவருமான முருகேசனிடம் விவரம் சேகரிக்க தனிப்படை போலீசார் விரைந்தனர். ஆனால் அவர் அங்கு இல்லாததால், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாகவும், அதற்காக அவரது இருப்பிடத்தை அறிய முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.

மதுரையில் உள்ள அவரது வீட்டில் சம்மனை ஒட்டவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. திருச்சியில் இருந்து, ராமநாதபுரம் வந்துள்ள தனிப்படை போலீசார் மணிகண்டனின் நெருங்கிய நண்பர்களிடம், நடிகை சாந்தினி விவகாரம் தொடர்பாக விசாரிக்க உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

டிரோன் மூலம் தேடுதல் வேட்டை

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தேடி ராமநாதபுரம் வந்துள்ள தனிப்படையினர், அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று, விசாரித்து வருகின்றனர். முதலில் அவர், நாகப்பட்டினம் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது. தற்போது மணிகண்டன் கீழக்கரை பகுதியில் தோட்டத்தில் உள்ள சொகுசு பங்களாவில் பதுங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எஸ்பி தலைமையில் போலீசார் கீழக்கரை, ஏர்வாடி, காஞ்சிரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து வந்தனர். மேலும் அடர்ந்த தோட்டங்கள் நிறைந்த பகுதிகளில் டிரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>