×

பொருட்கள் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் பாலகிருஷ்ணன், முத்தரசன் மீதான வழக்குகள் ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடந்த 2018 செப்டம்பர் 10ம் தேதி சென்னை அண்ணா சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்ற கண்டன போராட்டம்  நடந்தது. இதையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும்,  காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாகவும், பொது மக்களுக்கு இடையூறு செய்ததாகவும் அவர்கள் மீது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாலகிருஷ்ணன், முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் குமார், மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் ஜூன் 7ம் தேதி ஆஜராக வேண்டுமென்று எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில், இந்த சம்மனுக்கு தடைவிதிக்கவும், வழக்கை ரத்து செய்யவும் கோரி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் திருமூர்த்தி, மக்கள் பிரச்னைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து போராடுவது ஜனநாயக உரிமை. எனவே, மனுதாரர்கள் மீதான வழக்கு நிலைக்கதக்கதல்ல என்று கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags : Balakrishnan ,Trialshan , Balakrishnan, Mutharajan's case quashed: ICC order
× RELATED வயலில் இரைதேடும் பறவைகள் வங்கிகளில் சந்தேகப்படும்படி