×

பள்ளிகளில் தொடரும் பாலியல் புகார்கள் வாட்ஸ் அப்பில் பரவும் தகவலால் மகளிர் ஆணையம் விசாரணை: சென்னையில் மற்றொரு சாமியாரும் சிக்குகிறார்

சென்னை:  சென்னையில் சாமியார் நடத்தும் பள்ளியில் பாலியல் பலாத்காரம் மற்றும் சீண்டல்கள் நடத்துள்ளதாகவும், அதில் சாமியாரே இதில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சென்னை புறநகர்ப் பகுதியான கேளம்பாக்கம் அருகே பிரபல சாமியாருக்கு சொந்தமான சுசில்ஹரி பன்னாட்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு சி.பி.எஸ்.இ, மாநில பாடத்திட்டம், மான்டிச்சேரி ஆகிய 3 வகையான பிரிவுகளில் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளியில் வேலை செய்பவர்கள் அனைவரும் சாமியாரின் பக்தர்கள் என்றும் அவர்கள் ஆசிரியர்கள் அல்ல என்றும் கூறப்படுகிறது.

மேலும், 65 ஏக்கர் பரப்பளவில் சாமியாரின் ஆசிரமமாக தொடங்கப்பட்டு. பின்னர்,  அதே வளாகத்தில் பள்ளியும் செயல்படத் தொடங்கி உள்ளது. அடிக்கடி இந்திய அளவிலான பல்வேறு அமைப்புகளின் கூட்டங்களும், மாநாடுகளும் இந்த பள்ளி வளாகத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த பள்ளி வளாகத்தில் பெருமாள் கோயில் ஒன்றும் கட்டப்பட்டு தினசரி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான நாட்களில் சாமியாருக்கு பெருமாளுக்கு அணிவிக்கப்படும் கவச உடைகளை அணிந்து பெருமாளாக காட்சி தருவார். அவருக்கு பால், பழ அபிஷேகங்கள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் வாட்ஸ் அப் குரூப் ஒன்றை தொடங்கி அதில் தொடர்பில் இருந்தனர். கடந்த வாரம் சென்னை பள்ளியின் விவகாரம் வெளியில் வந்தபோது அதுபற்றியும் இந்த குரூப்பில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. அப்போது குழுவில் இருந்த மாணவி ஒருவர் தான் அந்தப்பள்ளியில் படித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தெரிவித்திருக்கிறார். தான் அப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்தபோது இரவு நேரங்களில் சகமாணவிகள் சாமியாருடன் ஒரே அறையில் இருந்ததை பார்த்ததாகவும், 10ம் வகுப்பு படித்தபோது மாணவி ஒருவர் சாமியார் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாகவும் பதட்டத்துடன் கூறியிருந்ததை பதிவு செய்திருந்தார்.

மேலும், சாமியார் தனது ஆடைகளை கழற்றும்படி கூறினார். மேலும் சாமியார் தான் போன ஜென்மத்தில் கிருஷ்ணன் என்றும் நீ கோபிகா என்று சொன்னதாகவும் அந்த மாணவி வாட்ஸ் அப் குழுவில் தெரிவித்துள்ளார். தன் உடைகளை கழற்ற முடியாது என்று கூறியபோது சாமியார் கொதித்துப் போனதாகவும் அவர் கூறினார். அந்த பள்ளியில் தங்கிப்படிக்கும் மாணவிகளுக்கு ஆல்கஹால் மற்றும் சில போதைப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் சாமியார் சொல்படி கேட்டு நடக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுவதாகவும் அந்த முன்னாள் மாணவி வாட்ஸ்அப் குழுவில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.சாமியார் ஒருவர் நடத்தி வரும் பள்ளியிலும் பாலியல் தொல்லை தரப்பட்ட தாகவும், சாமியாரே அந்த செயலில் ஈடுபட்டதாகவும் கடந்த ஒரு வாரமாக முன்னாள் மாணவ, மாணவியரின் வாட்ஸ் அப் குரூப்பில் பகிரப்பட்டது.

இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் யூட்யூப் தளத்தில் சாமியாரை வறுத்தெடுத்தனர். இந்நிலையில் இணைய தளத்தில் உலவும் தகவல்கள் உண்மையா என்பது குறித்து விசாரிக்க தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஆணையம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் ஆணையக் குழுவினர் நேற்று மாலை கேளம்பாக்கத்தில் உள்ள பள்ளி வளாகத்திற்கு சென்றனர். பள்ளி வளாகத்திற்கு சென்ற அக்குழுவினர் பள்ளி, அலுவலகம், சாமியாரின் அறை, அங்கு வந்து சென்றவர்கள் விபரம் ஆகியவை குறித்து மான்டிசோரி பள்ளி பிரிவின் முதல்வர் காயத்ரியிடம் கேட்டறிந்தனர்.

மேலும், சமூக வலைத்தளங்களில் பரவும் சாமியாரின் பாலியல் புகார் குறித்தும், ஆசிரம வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதியில் எத்தனை மாணவியர் தங்கி படிக்கின்றனர் என்றும், அவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணை நடத்தினர். விசாரணையில் நடைபெற்ற தகவல்கள் குறித்து தற்போது எதையும் சொல்ல முடியாது என்று ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கூறினார். பள்ளி மாணவிகளிடம் சாமியாரின் பாலியல் தொல்லைகள் குறித்து பெண்கள் ஆணையத்தின் விசாரணை தொடங்கி இருப்பது சாமியாருக்கும் அவருக்கு துணை போனவர்களுக்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Women's Commission ,Chennai , Women's Commission investigates allegations of sexual harassment in schools: Another preacher caught in Chennai
× RELATED பெண்களுக்கு எதிரான குற்றம்...