×

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியரிடம் 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை

* குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர்கள் ரகசியமாக வேறு கிளைக்கு இடமாற்றம்
* நண்பர்கள் வாக்குமூலத்தின்படி     மாணவிகள் பட்டியல் தயாரிப்பு

சென்னை: பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை போன்று, கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் கைது செய்யப்பட்ட தகவலை தொடர்ந்து, அவரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிகள் அடுத்தடுத்து புகார் அளித்து வருகின்றனர். அதேநேரம் கராத்தே மாஸ்டர் நண்பர்கள் 3 பேர் அளித்த வாக்குமூலத்தின்படி பாதிக்கப்பட்ட மாணவிகளின் பட்டியல் தயாரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  இதற்கிடையே ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் 3 நாள் காவலில் எடுத்ததை தொடர்ந்து, அவருடன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சக ஆசிரியர்களை ரகசியமாக வேறு கிளைக்கு பள்ளி நிர்வாகம் பணியிடமாற்றம் செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

பத்மா சேஷாத்திரி பள்ளி குழுமத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் பெற்றோர் டிகிரி படித்து இருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் என்ன? பள்ளி கட்டணத்தை முறையாக கட்டமுடியுமா என்ற கேள்விகளுக்கு பெற்றோர் அளிக்கும் பதிலை தொடர்ந்து பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவர்களை பள்ளி நிர்வாகம் சேர்க்கிறது. இந்த பள்ளியில் தற்போது 8 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மேலும், தமிழக அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை இந்த பள்ளி நிர்வாகம் வசூலிப்பது இல்லை. அதற்கு பதில் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ₹1 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை கல்வி கட்டணம் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக ‘பால பவன் அறக்கட்டளை’யின் கீழ் இயங்கும் பத்மா சேஷாத்திரி பள்ளி குழுமத்திற்கு ₹70 கோடி வருமானம் வருகிறது. இது இல்லாமல் ‘கேப்பிடல் டொனேஷன்’ என்று பள்ளியில் சேரும் புதிய மாணவர்களிடம் பல ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்கள். எப்படி பார்த்தாலும் பால பவன் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் பத்மா சேஷாத்திரி பள்ளி குழுமத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 100 கோடி ரூபாய் வருமானம் வருவதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த அளவிற்கு ஒரு பள்ளி குழுமத்திற்கு வருமானம் வரும்போது, மத்திய, மாநில சட்டத்திற்கு உட்பட்டு பள்ளி நிர்வாகம் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு  உரிய பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் பெயர் அளவில் மட்டும் பள்ளியில் பாலியல் தொடர்பாக விசாரணை குழு அமைத்துள்ளனர். அந்த குழுவில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் இடம் பெற்றுள்ளார். இதனால் மாணவிகளுக்கு எதிரான நடக்கும் பாலியல் தொந்தரவுகளை எந்த அளவிற்கு அந்த பள்ளி நிர்வாகம் கையாண்டு வந்துள்ளது என்பதற்கு இது ஒன்றே சான்று என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நேற்று வரை தமிழகம் முழுவதிலும் இருந்து காவல் துறை அறிவித்த 9444772222 வாட்ஸ் அப் எண்ணிற்கு 100க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர். அதில் 35க்கும் மேற்பட்ட புகார்கள் ‘பத்மா சேஷாத்திரி பள்ளி’ ஆசிரியர்கள் மீது அளிக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் பாலியல் புகார்களின் படி பத்மா சேஷாத்திரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் ஆகியோர் மட்டும் இதுவரை காவல் துறை கைது செய்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டில் தொடர்புள்ள மேலும் சில ஆசிரியர்களை கைது செய்ய அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர். அதேநேரம் பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகம் பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான ஆசிரியர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலனுடன் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சக ஆசிரியர்களை பள்ளியின் வேறு கிளைக்கு அவசர அவசரமாக முன் தேதியிட்ட நாட்களில் பணியிடமாற்றம் செய்தது போல் பணியிடமாற்றம் செய்துள்ளனர். அதேநேரம், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் ராஜகோபாலனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட 100க்கும் மேற்பட்ட மாணவிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை போலீசார் கைப்பற்றி பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் ரகசிய வாக்குமூலம் பெற்று வருகின்றனர். லேப்டாப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆபாச படங்கள் அதிகளவில் பள்ளி அறையில் எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் கடந்த 10 ஆண்டுகளாக பள்ளியில் ஒரு அசிரியர் மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு என்ற பெயரில் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது எப்படி பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாமல் இருந்தது. பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆசிரியர் மீது  அளித்த பாலியல் புகார்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளி நிர்வாகிகள் யாரேனும் மாணவிகள் பாலியல் தொடர்பில் இருந்துள்ளார்களா? சந்தேகம் எழுந்துள்ளது. சில மாணவிகளிடம் நடத்திய ரகசிய விசாரணையில் ஆசிரியர் ராஜகோபாலனுடன் பள்ளி நிர்வாகிகள் சிலர் எங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் பள்ளி நிர்வாகம் மாணவிகளின் பாலியல் வழக்கில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்காமலும், சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல குழு முன்பு ஆஜராகாமல் தவிர்த்ததாக தற்போது போலீசாரக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் ராஜகோபாலனை விசாரணை நடத்த போலீசார் நீதிமன்ற அனுமதியுடன் 3 நாள் காவலில் எடுத்துள்ளனர். இந்த விசாரணையில் தான் ஆசிரியர் ராஜகோபாலனுடன் மாணவிகளுக்கு யார் யார் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். அவர்கள் யார் யார் என்று முழுமையாக தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல், விருகம்பாக்கம் கிளையில் உள்ள பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் கற்று தரும் கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ், பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகளை பள்ளியின் தனி அறைக்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார்கள் வந்தது. அந்த புகாரின்படி அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் நேற்று முன்தினம் பாலியல் பலாத்காரம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் கராத்தே மாஸ்டர் கெவின்ராஜை அதிரடியாக கைது செய்தனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட கெபிராஜ் நண்பர்களும் உதவியாளர்களான 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், 3 பேரும் காவல் துறை சாட்சியாக  மாறி, கராத்தே மாஸ்டர் கெபிராஜ் ஜூடோ பயிற்சியின் போது மாணவிகளுக்கு அளித்த பாலியல் தொந்தரவு, மற்றும் வெளிமாவட்டங்களில் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள மாணவிகளை அழைத்து செல்லும் போது மிரட்டி பாலியல் பாலாத்காரம் செய்தார் என்றும் அதை நாங்கள் நேரடியாக பார்த்தோம் என்றும் கெவின்ராஜூக்கு எதிராக பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். நாங்கள் பார்த்த வகையில் 20க்கும் மேற்பட்ட மாணவிகளை அவர் மிரட்டி உல்லாசமாக இருந்தார். எங்களுக்கு தெரியாமல் கெவின்ராஜ்  பல மாணவிகளை மிரட்டி சீரழித்ததாக எங்களிடம் அவர் பல நேரங்களில் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் கெவின்ராஜ் நண்பர்கள் 3 பேர் அளித்த வாக்குமூலத்தின் படி பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சியின் போது பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிகள் எத்தனை பேர், அவர்கள் யார் யார்? என்பது குறித்து போலீசார் பட்டியல் தயாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் மாணவிகள் என்பதால் அனைத்தும் போலீசார் ரகசியமாக எடுத்து வருவதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் ராஜகோபாலனை போன்று கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் மீது மாணவிகள் தொடர் பாலியல் புகார் அளித்து வருவதால், அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணியில் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர்கள் மீது அடுக்கடுக்காக பாதிக்கப்பட்ட மாணவிகள் பாலியல் புகார் அளித்து வருவதால் பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து வரும் மாணவிகளின் பெற்றோர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைதான கெவின்ராஜ் நண்பர்களும், உதவியாளர்களுமான 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள், மூவரும் காவல்துறை சாட்சியாக மாறி பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

Tags : Padma Seshadri , Sexual harassment of students by Padma Seshadri school teacher 3 day police custody investigation
× RELATED சென்னையில் பத்ம சேஷாத்ரியை தொடர்ந்து...