×

கொரோனா சிகிச்சை - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆக்சிஜன் அளவு 94 அல்லது அதற்கு மேல் இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் சிகிச்சை பெறுவதற்கான வழிமுறைகளை 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் ஆக்சிஜன் அளவு 94 அல்லது அதற்கு மேல் இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். வீட்டில் தனிமைப்படுத்துவதற்கான வசதி இல்லையெனில் சிகிச்சை மையங்களுக்கு பரிந்துரைக்கலாம்.

ஒருவேளை கர்ப்பிணியாகவோ, பாலூட்டும் தாய்மாராகவோ அல்லது 65 வயதிற்கு மேற்பட்டவர்களாகவோ இருந்தால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

ஆக்சிஜன் அளவு 90 முதல் 94 வரை உள்ளவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திலோ, சிகிச்சை மையங்களிலோ அனுமதிக்கப்பட வேண்டும். ஆக்சிஜன் அளவு 90க்கும் குறைவாக இருக்கும் நிலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலோ, மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலோ அல்லது கொரோனா மருத்துவமனைகளிலோ உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையை தொடங்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை கூறியுள்ளது.



Tags : corona
× RELATED நீட் தேர்வின் ஆபத்துகளை முதன் முதலில்...