×

ரூ.11 லட்சம் அபராதம் எதிரொலி: பிரெஞ்ச் ஓபனில் இருந்து ஒசாகா விலகல்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான ஜப்பானின் நவோமி ஒசாகா 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ருமேனியா வீராங்கனை பாட்ரிசியா மரியா டிக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டிக்கு பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நவோமி ஒசாகா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதனை அடுத்து போட்டி அமைப்பு குழுவின் விதிமுறையை மதிக்காமல் நடந்து கொண்ட நவோமி ஒசாகாவுக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக பிரெஞ்ச் ஓபன் போட்டி அதிகாரி அறிவித்தார்.

மீடியாக்களை சந்திக்கும் தனது கடமையை ஒசாகா தொடர்ந்து தவிர்த்தால் போட்டியில் இருந்து நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து நவோமி ஒசாகா விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ``போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களுக்கு நான் கவனச்சிதறலாக இருந்து விடக்கூடாது என்பதற்காக போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்’’ என பதிவிட்டுள்ளார். உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் டென்னிஸ் வீராங்கனையாக நவோமி ஒசாகா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Osaka ,French Open , Echo of Rs 11 lakh fine: Osaka withdraws from French Open
× RELATED கொழுப்பு சத்து குறைக்க மருந்து சாப்பிட்ட 5 பேர் பலி