செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் தடுப்பூசி உற்பத்தி பணியை விரைந்து தொடங்குங்கள்!: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்..!!

சென்னை: செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்யும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கக்கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். தடுப்பூசி கிடைப்பதில் ஏற்படும் காலதாமதம், மக்களை பாதுகாக்கும் பணிக்கு அறைகூவலாக அமைந்துவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார். 

தடுப்பூசி போடும் பணி நிறைவடைய நீண்டகாலமானால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். குஜராத், உத்திரப்பிரதேசம், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், பீகார் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய 7 மாநிலங்களுக்கு மட்டும் 85 விழுக்காடு தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மாநிலங்களுக்கு இடையே தடுப்பூசி செலுத்துவதில் ஏற்றத்தாழ்வு நிலவி வருவதாகவும் வைகோ கூறியுள்ளார். 

தடுப்பூசி பற்றாக்குறையை போக்க செங்கல்பட்டில் உள்ள இந்துஸ்தான் பயோடெக்கில் உற்பத்தியை தொடங்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி இறக்குமதி செய்யும் தமிழக அரசின் முயற்சிக்கு ஒன்றிய அரசு துணை நிற்க வேண்டும் என்றும் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். 

Related Stories:

>