தமிழகத்தில் உள்ள 3 தடுப்பூசி உற்பத்தி மையங்களையும் மீண்டும் தொடங்க நடவடிக்கை: திமுக எம்பி வில்சன் கடிதத்திற்கு மத்திய அரசு பதில்

சென்னை: தமிழகத்தில் உள்ள 3 தடுப்பூசி உற்பத்தி மையங்களையும் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தனுக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களுக்கு கடிதம் எழுதினேன். சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டியூட், செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையம் (ஹில் பயோடெக்), குன்னூரில் உள்ள பாஸ்டர் இன்ஸ்டியூட் ஆகிய மையங்களில் கோவி சீல்ட் மற்றம் கோவாக்ஸின் தடுப்பூசிகளை தயாரிக்க தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் உள்ளது.  செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையம் ரூ.594 கோடி செலவில் கடந்த 2012ல் தொடங்கப்பட்டது.

மொத்தமாக 408 பணியாளர்கள் தேவை என்ற நிலையில் 251 பணியிடங்களில் காலியாக உள்ளன. குன்னூரில் உள்ள பாஸ்டர் இன்ஸ்டியூட் இந்தியாவில் உள்ள பழமையான தடுப்பூசி தயாரிப்பு மையமாகும். இந்த உற்பத்தி மையங்கள் சிறப்பாக செயல்படக்கூடியவை. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையின்போது செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் உள்ளிட்ட 3 மையங்களையும் தொடங்க வேண்டும் என்று வாதிட்டேன். அதற்கு பதிலளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இரண்டு தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்வதற்கான தொழிநுட்பம் இல்லை. உற்பத்தி தொடர்பாக 2 டெண்டர்கள் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு நிறுவனமும் டெண்டரை எடுக்க முன்வரவில்லை என்று வாதிட்டார். இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு போலியானதாகவே தெரிகிறது.

இந்தியாவில் சீரம் இன்ஸ்டியூட் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வரும் நிலையில் அவர்களின் தொழில்நுட்பங்களை ஏன் பயன்படுத்த முடியாது. அவர்களால் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும். தேசிய நெருக்கடி போன்ற காலங்களிலும், இதுபோன்ற இக்கட்டான காலத்திலும் கட்டாய லைசென்ஸ் வழங்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. இந்தியாவில் மிக மோசமான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டாய லைசென்ஸ் வழங்க முடியும். மக்கள் கொரோனா தொற்றை எதிர்த்து போராடிவரும் நிலையில் மத்திய அரசு தமிழகத்தில் உள்ள 3 தடுப்பூசி மையங்களையும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதற்கு, பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ஹர்ஸ் வர்தன் தமிழகத்தில் உள்ள 3 தடுப்பூசி உற்பத்தி மையங்களையும் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Related Stories:

>