மேற்கு வங்க தலைமை செயலாளரை மத்திய அரசு பணிக்கு மாற்றும் விவகாரம்: பிரதமர் மோடியுடன் மம்தா நேரடி மோதல்

கொல்கத்தா: ‘மத்திய அரசு பணிக்கு மேற்கு வங்க தலைமை செயலாளரை அனுப்ப முடியாது’, என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி நிலையில், அவருக்கு 3 ஆண்டுகள் பணி நீடிப்பு வழங்கி அரசின் தலைமை ஆலோசகராக நியமனம் செய்து முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்கு வங்கத்தின் புதிய தலைமை செயலாளராக திவேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ‘யாஸ்’ புயலால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்ய கடந்த சில நாட்களுக்கு முன் மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி, கொல்கத்தாவில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்திற்கு முதல்வர் மம்தா மற்றும் தலைமைச் செயலாளர் 30 நிமிடங்கள் தாமதமாக வந்தனர். அவர்கள் வந்தவுடன் புயல் பாதிப்பு குறித்த அறிக்கைகளையும், 20,000 கோடி நிவாரண நிதி வழங்கக்கோரும் கடிதத்தையும் வழங்கி விட்டு, மோடியிடம் எதுவும் பேசாமல் வேறு நிகழ்ச்சிகள் இருப்பதாக கூறிவிட்டு 15 நிமிடங்களில் சென்று விட்டனர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த சில மணி நேரங்களிலேயே, மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாய் இடமாற்றம் செய்யப்பட்டு, மத்திய அரசுப் பணிக்கு அழைக்கப்பட்டார். இவரை நேற்று (மே 31) காலை 10 மணிக்குள் மேற்கு வங்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசு  கேட்டுக் கொண்டது. ஆனால், தலைமை செயலாளரை மேற்கு வங்க அரசு விடுவிக்கவில்லை. இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பிரதமர் மோடிக்கு மம்தா நேற்று கடிதம் எழுதிய நிலையில், மத்திய அரசிடம் இருந்து தலைமை செயலாளர் அலபன் பந்தோபாத்யாய்வுக்கு, ‘‘ஏன் மத்திய அரசு பணியில் இன்னும் சேரவில்லை’’ என்று கேட்டு உடனடியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  இந்நிலையில், மேற்கு வங்க தலைமை செயலாளர் அலபன் பந்தோபாத்யாய் பணி மூப்பின் அடிப்படையில் நேற்று ஓய்வு பெற்றார். இவருக்கு ஏற்கனவே மூன்று மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில், தனக்கு   பணி நீட்டிப்பு வேண்டாம். தலைமை செயலாளராக பணியை தொடர விரும்பவில்லை  என ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து, உடனடியாக அவருக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி மேற்கு வங்க அரசின் தலைமை ஆலோசகராக நியமித்து மம்தா பானர்ஜி அதிரடியாக உத்தரவிட்டார். புதிய தலைமை செயலாளராக திவேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், மத்திய அரசுடனும், பிரதமர் மோடியுடனும் மம்தா பகிரங்கமாக நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளார். இதனால், தேசிய அளவில் பரபரப்பு நிலவுகிறது.

மாநில அரசுகள், ஐ.ஏ.எஸ் ஐபிஎஸ்களுக்கு அழைப்பு

தலைமை செயலாளர் மாற்றம் விவகாரத்தில் மத்திய அரசுடன் ஏற்பட்டுள்ள மோதலை தேசிய போராட்டமாக மாற்ற மம்தா முயற்சி மேற்கொண்டள்ளார். மத்திய அரசின் இதுபோன்ற செயல்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்து போராட, இதர மாநில அரசுகள், எதிர்க்கட்சிகள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கங்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அதிகாரிகள் என்ன கொத்தடிமைகளா?

மம்தா பானர்ஜி நேற்று அளித்த பேட்டியில், ‘‘தலைமை செயலாளர் விவகாரத்தில் நான், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்திற்கு அவர்கள் பதிலளித்து உள்ளார்கள். தலைமை செயலாளரை மத்திய அரசு பணிக்கு இன்று சேர உத்தரவிட்டுள்ளார்கள். தலைமை செயலாளர் திரும்ப அழைக்கப்பட்ட உத்தரவை நான் பின்பற்ற மாட்டேன். அவர் ஏன் மாற்றப்பட்டார் என எந்த விளக்கமும் சொல்லவில்லை. கொரோனா காலத்தில் அவருடைய சேவை எங்களுக்கு தேவைப்படுகிறது. அதிகாரிகள் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து சேவையாற்றி வரும் நிலையில் அவர்களை அவமதிப்பதா? அவர்கள் என்ன கொத்தடிமைகளா?. இதில் இருந்து மத்திய அரசும், மோடியும் என்ன சொல்ல வருகிறார்கள். ஒரு மாநில அரசிடம் எந்த கருத்தும் கேட்காமல் எப்படி ஒரு அதிகாரியை மத்திய அரசு பணிக்கு மாற்ற முடியும். மத்திய அரசு பணியில் ஏராளமான மேற்கு வங்க அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை எந்த அனுமதியும் இல்லாமல் நான் மாநில அரசுக்கு திரும்ப அழைக்க முடியுமா  பிரதமர்?’’ என்றார்.

Related Stories:

>