×

புகையிலை பழக்கத்தின் பக்க விளைவுகளால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பு: அரசு பல் மருத்துவமனை டீன் டாக்டர் விமலா தகவல்

சென்னை: உலக புகையிலை ஒழிப்பு தினம் ஒவ்வோர் ஆண்டும் மே 31ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக புகையிலை ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. ‘புகையிலை பழக்கத்தை நிறுத்த உறுதிகொள்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  இந்த நிகழ்ச்சியை மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் விமலா தொடங்கி வைத்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு, புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் அனைவரும் புகையிலை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதுகுறித்து மருத்துவமனை டீன் டாக்டர் விமலா கூறியதாவது:  ஒவ்வோர் ஆண்டும் புகையிலை ஒழிப்பு தினத்தன்று விழிப்புணர்வு ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் ஒரு கருப்பொருளை வெளியிடுகிறது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘புகையிலை பழக்கத்தை நிறுத்த உறுதிகொள்’ என்பதாகும். உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் நடத்திய ஆய்வின்படி 29.6 சதவீதத்தினர் புகையிலை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று ஆய்வில் கூறுகின்றனர். இதன் காரணமாக வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் புகையிலைப் பழக்கத்தினால் வரும் பக்க விளைவுகளால் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Dr. ,Vimala ,Dean ,Government Dental Hospital , 10 lakh people die every year due to side effects of tobacco use: Government Dental Hospital Dean Dr. Vimala Information
× RELATED சுகாதார மைய மேற்கூரை சரிந்தது, மூதாட்டி படுகாயம்