கொரோனா தொற்றால் செய்தியாளர் உயிரிழந்தால் இழப்பீட்டு தொகை 10 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை

சென்னை: கொரோனா தொற்றால் செய்தியாளர் உயிரிழந்தால் வழங்கப்படும் அரசின் இழப்பீட்டு தொகை 5 லட்சத்தில் இருந்து ₹10 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து உண்மையான செய்திகளை சேகரித்து வழங்கிடும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணிபுரியும் அரசு அங்கீகார அட்டை, செய்தியாளர் அட்டை, மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை பெற்ற செய்தியாளர் கொரோனா நோயால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது வாரிசுதாரருக்கு வழங்கப்பட்டு வரும் அரசின் இழப்பீட்டு தொகை ₹5 லட்சத்தில் இருந்து ₹10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

விண்ணப்பதாரர்கள், அரசால் வழங்கப்பட்ட அங்கீகார அட்டையின் நகல், செய்தியாளருக்கு அவர் பணிபுரிந்த நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் நகல், பத்திரிகை, தொலைக்காட்சி, செய்தி நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரிந்ததற்கான அசல் சான்றிதழ், இருப்பிட முகவரியாக உணவு பொருள் வழங்கல் அட்டை, ஆதார் அட்டை நகல், இறப்பு சான்றிதழ் நகல், வாரிசு சான்றிதழ் நகல், மத்திய-மாநில அரசால் கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட இறப்பு குறித்து வழங்கப்படும் உதவிகள் எதுவும் பெறுகிறாரா, இல்லையா என்பதற்கான அசல் சான்றிதழ், செய்தியாளர் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்ததற்கான சிகிச்சை பெற்ற மருத்துவமனை மருத்துவரின் அறிக்கை அசல் ஆகியவைகளை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>