×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் ஸ்வியாடெக்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக் (போலந்து) தகுதி பெற்றார். முதல் சுற்றில் ஸ்லோவேனியாவின் கயா யுவானுடன் (20 வயது, 101வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (20 வயது, 9வது ரேங்க்), முதல் செட்டில் அதிரடியாக விளையாடி 6-0 என்ற கணக்கில் மிக எளிதாக வென்று முன்னிலை பெற்றார். எனினும், 2வது செட்டில் கயா யுவான் கடும் நெருக்கடி கொடுத்ததால் ஆட்டத்தில் அனல் பறந்தது.

1 மணி, 27 நிமிடத்துக்கு நீடித்த இப்போட்டியில் ஸ்வியாடெக் 6-0, 7-5 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இது அவருக்கு பிறந்தநாள் பரிசாகவும் அமைந்தது. எதிர்த்து விளையாடிய கயா யுவான், 2017 விம்பிள்டன் தொடரின் சிறுமியர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு முதல் சுற்றில் களமிறங்கிய உள்ளூர் வீராங்கனை கரோலின் கார்சியா 6-3, 6-1 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் லாரா சீஜ்மண்டை வீழ்த்தினார்.  பியான்கா போராட்டம் வீண்: கனடா நட்சத்திரம் பியான்கா ஆண்ட்ரீஸ்கு (20 வயது, 7வது ரேங்க்) தனது முதல் சுற்றில் ஸ்லோவேனியாவின் தாமரா ஜிடான்செக்குடன் (23 வயது, 85வது ரேங்க்) மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், 3 செட்களுமே டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்து ரசிகர்களை பரவசப்படுத்தின. 3 மணி, 20 நிமிடத்துக்கு நடந்த கடுமையான போராட்டத்தின் முடிவில் ஜிடான்செக் 6-7 (1-7), 7-6 (7-2), 9-7 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

தலை தப்பினார் சின்னர்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று போட்டி ஒன்றில் இத்தாலியின் இளம் வீரர் ஜானிக் சின்னர் (19 வயது, 19வது ரேங்க்) உள்ளூர் வீரர் பியரி ஹியூஸ் ஹெர்பர்ட்டுடன் (30 வயது, 85வது ரேங்க்) மோதினார். மூன்றரை மணி நேரத்துக்கு நடந்த இப்போட்டியில் ஹெர்பர்ட் மேட்ச் பாயின்ட் வரை சென்றாலும், விடாப்பிடியாக உறுதியுடன் விளையாடி மீண்ட சின்னர் 6-1, 4-6, 6-7 (4-7), 7-5, 6-4 என 5 செட்களில் வெற்றியை வசப்படுத்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். முதல் வெற்றி: ரஷ்ய நட்சத்திரம் டானில் மெட்வதேவ் (2வது ரேங்க்) தனது முதல் சுற்றில் 6-3, 6-3, 7-5 என்ற நேர் செட்களில் அலெக்சாண்டர் புப்லிக்கை (கஜகஸ்தான், 37வது ரேங்க்) வீழ்த்தினார். பிரெஞ்ச் ஓபனில் முதல் முறையாக அவர் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதற்கு முந்தைய 4 முயற்சிகளில் அவர் ஒரு முறை கூட முதல் சுற்றை தாண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெடரர் அசத்தல்: சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் தனது முதல் சுற்றில் 6-2, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் டெனிஸ் இஸ்டோமினை எளிதாக வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி, 33 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
பிரெஞ்ச் ஓபனில் 3வது நாளான இன்று நட்சத்திர வீரர்கள் ரபேல் நடால் (ஸ்பெயின்), நோவாக் ஜோகோவிச் (செர்பியா), நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.), கரோலினா பிளிஸ்கோவா (செக்.) ஆகியோர் முதல் சுற்றில் களமிறங்குகின்றனர்.

Tags : SwiTech ,French Open , SwiTech in the second round of the French Open tennis
× RELATED பிரெஞ்ச் ஓபன் முதல் சுற்று; டொமினிக்...