×

ஒரு மாதத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் சின்னத்திரை கலைஞர்கள் 2 ஆயிரம் பேருக்கு சன் பவுண்டேஷன் நிவாரண உதவி

ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் 2 ஆயிரம் பேருக்கு சன் பவுண்டேஷன் சார்பில் ஒரு மாதத்துக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த பல்வேறு தரப்பினருக்கும் சன் டி.வி. குழுமம் பல்வேறு உதவிகளை அளித்து வருகிறது. கொரோனா முதல் அலையின்போது, பேரிடர் மேலாண்மை நிதிக்கு நிதி உதவி அளித்ததுடன், வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கு நேரடியாகவும் சன் டி.வி. குழுமம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இப்போது, இரண்டாம் அலை நோய் பரவல் பாதிப்புகளை எதிர்கொள்ள 30 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக சன் டி.வி. குழுமம் அறிவித்தது. அதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 10 கோடி ரூபாய்க்கான காசோலையை சன் டி.வி. குழுமத் தலைவர் கலாநிதி மாறன் வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, சன் குழுமத்தைச் சேர்ந்த சன் டைரக்ட் DTH சார்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, தற்போது அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் 2 ஆயிரம் பேருக்கு சன் பவுண்டேஷன் சார்பில் நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டன. இந்த நிவாரணப் பொருட்களை சன் பவுண்டேஷன் சார்பில் காவேரி கலாநிதி மாறன், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சுஜாதா விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் பாலேஸ்வர், இ.ராமதாஸ் ஆகியோரிடம் வழங்கினார். ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சன் பவுண்டேஷன் உதவி செய்வது மகிழ்ச்சி அளிப்பதாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டைப்போலவே, இந்த ஆண்டும் சின்னத்திரை கலைஞர்கள், தொழில்நுட்பப் பணியாளர்களின் 2 ஆயிரம் குடும்பங்களுக்கும் ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள், எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. சமூக மேம்பாடு, ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பணிகளுக்கு சன் டி.வி. மற்றும் சன் பவுண்டேஷன் இணைந்து இதுவரை 160 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி உதவி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Sun Foundation , The Sun Foundation provides relief assistance to 2,000 logo artists for essential items needed for a month
× RELATED பள்ளிகள், மருத்துவமனைகளை மேம்படுத்த...