×

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கை மீறி சுற்றியதாக 260 வாகனங்கள் பறிமுதல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கை மீறி சுற்றியதாக 260 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் கொண்டுசெல்லும் வாகனங்கள் தவிர மற்ற வண்டிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை மீறி சுற்றுகின்றவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்வதுடன் அபராதம் விதித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம், மதுராந்தகம், செய்யூர், மறைமலைநகர், திருக்கழுக்குன்றம், கிழக்கு கடற்கரை சாலை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகள் வாகனங்கள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடியது.

இந்த நிலையில், ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களின் 260 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன் முக கவசம் அணியாமல் சென்ற 130 பேர், சமூக இடைவெளியை பின்பற்றாத 25 பேருக்கு அபராதம் விதித்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.சுந்தரவதனம் கூறுகையில், ‘’முழு ஊரடங்கு காரணமாக மாவட்டம் முழுவதும் 450 போலீசார்  கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இ பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். தேவையில்லாமல் வெளியில் சுற்றினால் வழக்குப்பதிவு செய்யப்படும். அனுமதியின்றி வாகனங்களில் சுற்றுகின்றவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

எனவே, பொதுமக்கள் வெளியே சுற்றாமல் நோயை கட்டுக்குள் கொண்டுவர அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். டாஸ்மாக் கடை திறக்காததால் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் பதுக்கி விற்கின்றனர். அவர்களை தொடர்ந்து கண்காணித்து கைது செய்து வருகிறோம்’’ என்றார்

Tags : Sengalupu district , 260 vehicles seized in Chengalpattu district
× RELATED கனமழை காரணமாக செங்கல்பட்டு...