கிருஷ்ணகிரி: ஜெயலலிதா ஆன்மா சாந்தி அடைய சசிகலா குடும்பம் அதிமுகவில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக தொண்டர்களிடம் சசிகலா பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த விவகாரம் அதிமுகவில் சலசலப்பை உருவாக்கி வரும் நிலையில், சசிகலா அமமுக நிர்வாகிகளிடம் மட்டுமே பேசி வருவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவை அழைத்து எந்த தொண்டரும் பேசவில்லை. மாறாக சசிகலா தான் அவர்களிடம் பேசி வருகிறார் என்றார். அதிமுக-வை திசை திருப்பி தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்த முயற்சிக்கும் சசிகலாவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்றும் முனுசாமி கூறினார்.
மேலும் சசிகலா பேச்சை அதிமுக தொண்டர்கள் நம்பமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். சசிகலா அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை என்றும் அதிமுகவுக்கும், சசிகலாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சாதாரண நிலையில் இருந்த சசிகலா குடும்பம் இன்று தமிழகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய கோடீஸ்வரர் குடும்பத்தில் அதுவும் ஒன்றாக இருக்கிறது. அவ்வாறு உயர்த்திய புரட்சி தலைவர் ஜெயலலிதா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய சசிகலா குடும்பம் அதிமுகவில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் முனுசாமி தெரிவித்தார்.