‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நீர்வளத்துறை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவி பொறியாளர்கள் நியமனம்: தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து நடவடிக்கை

சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நீர்வளத்துறை சார்ந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உபகோட்டம் மற்றும் கோட்டங்கள் வாரியாக உதவி பொறியாளர்கள் நியமனம் ெசய்ய நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். திமுக சார்பில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது ‘உங்கள் ெதாகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் 8 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வு காணவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த துறை சார்பில் இதற்காக பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யவும் உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், தற்போது நீர்வளத்துறை சார்ந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு உபகோட்ட, கோட்ட அலுவலகங்களில் உதவி பொறியாளர் ஒருவரை நியமனம் செய்ய நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து மண்டல நீர்வளப்பிரிவு தலைமை பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் பெறப்படும் நீர்வளத்துறையை சார்ந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு தங்கள் அலுவலகத்திலும் மற்றும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வட்ட மற்றும் கோட்ட அலுவலகங்களில் உதவி பொறியாளர் ஒருவரை கூடுதல் பணி மேற்கொள்ள நியமனம் செய்து உரிய ஆணை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், கூடுதல் பணி மேற்கொள்ளள நியமிக்கப்பட்ட உதவி பொறியாளர்களின் கைப்பேசி எண் குறித்த விவரத்தை தலைமை அலுவலகத்துக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>