×

வரும் ஜூன் 1ம் தேதி முதல் உள்நாட்டு விமான கட்டணம் உயர்வு: விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: இனி உள்நாட்டில் விமான பயணம் செய்வதற்கான செலவு கூடுகிறது. உள்நாட்டு விமான கட்டணத்தை மத்திய அரசு 13 முதல் 16 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இது வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
கொரோனாவால் மிகவும் பாதிப்பை சந்தித்த துறைகளில் குறிப்பிடத்தக்கது விமானத்துறை. கொரோனா 2வது அலைகாரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மீண்டும் விமான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. எனவே நெருக்கடியில் சிக்கி தவிக்கும் விமான நிறுவனங்களுக்கு உதவதற்காக உள்நாட்டு விமான கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.வரும் ஜூன் 1 முதல் உள்நாட்டு பயணத்துக்கான விமானக் கட்டணம் உயர்கிறது. அடிப்படைக் கட்டணத்திலிருந்து 13 முதல் 16 சதவீதம் வரை அதிகரிக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி, 40 நிமிடங்களுக்கும் குறைவான நேர பயணத்தை மேற்கொள்ளும் விமானங்களில் செல்ல குறைந்தபட்ச கட்டணம் 2300 ல் இருந்து 2,600 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 13 சதவீதம் அதிகமாகும். 40 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் இலக்கை அடையும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் 3300க்குள் இருக்கும். இதற்கு முன் இந்த கட்டணம்  2,900 ஆக இருந்தது. 60 முதல் 90 நிமிடங்கள் பயண தூரம் கொண்ட விமானங்களில் செல்ல 4,000 கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது.  பயண தூரத்தின் அடிப்படையில், 90-120 நிமிடங்களில் இலக்கை அடையும் விமானங்களில் பயணிக்க  4,700, 150-180 நிமிடங்களில் இலக்கை அடையும் விமானங்களில் பயணிக்க 6,100, 180-210 நிமிடங்களில் இலக்கை அடையும் விமானங்களில் பயணிக்க 7,400 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விமான டிக்கெட் கட்டணம் 300 முதல் 1000 வரை அதிகரிக்கும்.

உதாரணத்திற்கு டெல்லியில் இருந்து மும்பை செல்லும் விமான டிக்கெட் கட்டணம் தற்போதைய விலையை விட 700 அதிகரிக்கும்.  கொரோனால் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டுமென கட்டுப்பாடுகள் தொடர வாய்ப்பிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் கூறி உள்ளது. இந்த டிக்கெட் கட்டண விலை உயர்வு வரும் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணத்தை மத்திய அரசு 10 முதல் 13 சதவீதம் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.



Tags : Ministry of Civil Aviation , Domestic air fare hike from June 1: Ministry of Civil Aviation
× RELATED ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம்...