×

பேஸ்புக், கூகுள், வாட்ஸ் அப் பணிந்தது மத்திய அரசின் புதிய விதிகளை டிவிட்டர் மட்டுமே ஏற்கவில்லை

புதுடெல்லி: மத்திய அரசின் புதிய விதிமுறைக்கு இணங்குவதாக பேஸ்புக், கூகுள், வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை டிவிட்டர் மட்டுமே விதிமுறைகளை ஏற்காமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆன்லைன் செய்தி நிறுவனங்கள், ஓடிடி தளங்கள், சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த விதிமுறைகளை ஏற்க 90 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த புதிய விதிமுறைப்படி, நிறுவனங்கள் பயனாளர்களின் குறைகளை தீர்ப்பதற்காக தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மூன்றடுக்கு முறையில் குறைதீர் அதிகாரிகளை நியமித்து அவர்களின் தகவல்களை அரசுக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுக விதிக்கப்பட்டுள்ளன.

இந்த விதிகளை ஏற்பதற்கான கெடு முடிந்த நிலையில், இதுவரை பேஸ்புக், கூகுள், லிங்க்ட் இன், வாட்ஸ்ஆப், ஷேர்சாட் மற்றும் டெலிகிராம் உள்ளிட்டவை தேவையான விவரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளன. குறைதீர்ப்பு அதிகாரிகள், அவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் பகிரப்பட்டுள்ளது. ஆனால் டிவிட்டர் மட்டும் இன்னும் புதிய விதிகளை பின்பற்றவில்லை என்று நம்பத்தகுந்த அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் சம்பந்தப்பட்ட விவரங்களையும் டிவிட்டர் இன்னும் அரசுக்கு அனுப்பி வைக்கவில்லை என கூறப்படுகின்றது. முன்னதாக, டிவிட்டர் நிறுவனம் அரசின் விதிகளை உடனடியாக ஏற்க உத்தரவிட வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Facebook ,Google ,WhatsApp ,Twitter , Facebook, Google, WhatsApp bowed Twitter was not the only one to accept the new rules of the federal government
× RELATED இசையில் ஏது சாதிய ஏற்றத்தாழ்வு;...