×

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவுக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: கான்பூர் ஐ.ஐ.டி.யின் தலைவராக இருந்த முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணனை கலைஞர், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமித்தார். அப்பணியில் இருந்த போது  பல்கலைக்கழக மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வியை அளிக்கும் உன்னத உட்கட்டமைப்பை உருவாக்கி அண்ணா பல்கலைக்கழகத்தின் புகழை உலகெங்கும் பரப்பியவர்.  அவர்தான் திமுக ஆட்சியில் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்குக் காரணமான கதாநாயகனாக இருந்தவர்.அனந்தகிருஷ்ணன் கொடுத்த அறிக்கைதான்  கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கண்களைத் திறந்தது என்பதை இன்று பொறியாளர்களாக, மருத்துவர்களாக இருக்கும் ஒவ்வொரு கிராமப்புற நடுத்தர ஏழை எளிய மாணவர்கள் அனைவரும் நன்கு உணருவர். அது மட்டுமின்றி அவர் தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பப் புரட்சி நடைபெறுவதற்கான முதலமைச்சரின் ஆலோசகராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றியவர்.

பொறியியல் கல்விச் சேர்க்கையில் ஒற்றைச் சாளரமுறையை  கலைஞர் தமது ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்துவதற்கும், தமிழ் இணைய மாநாடு நடத்தி, இணையத்தில் தமிழின் பயன்பாட்டை எளிமைப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்படுவதற்கும் உறுதுணையாக இருந்தவர். அறிவுக்களஞ்சியம் என்று அழைக்கப்படும் அனந்தகிருஷ்ணன்  தலை சிறந்த கல்வியாளர். தமிழகத்தின் பெருமைக்குரிய கல்வியாளரை இழந்திருப்பது  கல்வியுலகத்திற்கு மாபெரும் இழப்பாகும். டாக்டர் மு.அனந்தகிருஷ்ணன்  மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், ஆசிரியர், பேராசிரியர் மற்றும் இன்று வரை அவர் மீது தீராத அன்பு செலுத்தி வரும் மாணவ சமுதாயத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


Tags : Anna University ,Former ,Vice Chancellor ,Anantha Krishnan ,Chief Minister MK Stalin , Anna University Former Vice Chancellor Anantha Krishnan passes away: Chief Minister MK Stalin's condolences
× RELATED அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற 11 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து