5.80 லட்சம் டெலிபோன் அழைப்புகளுக்கு மருத்துவ, மனநல ஆலோசனை: ஆணையர் ககன்தீப் சிங் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று பாதித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு மண்டல கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொலைபேசி வாயிலாக சுமார் 5.80 லட்சம் அழைப்புகளின் மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று பாதித்த நபர்களில் 45 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் முதற்கட்டப் பரிசோதனை மையங்களுக்கு மாநகராட்சி ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைக்குப் பிறகு தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

40 வயதிற்கு கீழ் உள்ள நபர்களுக்கு மாநகராட்சியில் மருத்துவக் குழுவின் மூலம் வீடுகளுக்கு சென்று காய்ச்சல், சுவாசத்தின் அளவு போன்ற பலகட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை குறித்து நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்கவும், தனிமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து மீள ஆலோசனை வழங்கவும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மண்டல அலுவலர்கள் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, பயிற்சி மருத்துவர் மூலமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மே 13 முதல் மே 27 வரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு மண்டலக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து பயிற்சி மருத்துவர்களின் வாயிலாக 5 லட்சத்து 80 ஆயிரத்து 418 தொலைபேசி அழைப்பின் மூலம் உடல்நிலை குறித்து தகவல்கள் தரப்பட்டுள்ளன. இதில் தொடர்ந்து ஐந்து நாட்கள் காய்ச்சல் வந்த 1,621 நபர்களுக்கும், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக அறியப்பட்ட 360 நபர்களுக்கும் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி வாயிலாக அழைக்கப்பட்டு உடல்நிலை குறித்து விவரம் கேட்கப்பட்ட நபர்களில் 165 பேருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் உடல்நிலையில் சிரமங்கள் இருப்பதாக தெரிவித்த 260 நபர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு அடுத்தகட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

Related Stories:

>