×

ஒரே மேடையில் சந்தோஷம், துக்கமும், மணமேடை ஏறிய அக்காள் திடீர் மரணம்: மணமகனை சோகத்துடன் கரம்பிடித்த தங்கை

லக்னோ: உத்தரபிரதேசத்தில் அக்காளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், அவர் திடீரென இறந்ததால், அவரது சகோதரியை மணமகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டம் பர்தானா அடுத்த சமஸ்பூரில் திருமண விழா நடந்தது. அப்போது, மணமகனும், மணமகளும் மாலையும் கழுத்துமாக புன்சிரிப்புடன் உறவினர்களையும், நண்பர்களையும் வரவேற்றனர். வருங்கால கணவர் மஞ்சேஷ்குமாரின் அருகில் மணமகள் சூரபி நின்றுகொண்டு எல்லோரையும் வரவேற்றார். திடீரென மணமகள் மயக்கமுற்றார். அப்படியே நிலைகுலைந்து கீழே விழுந்த அவர் இறந்துவிட்டார். மருத்துவர் ஒருவர் பரிசோதித்து பார்த்த போது, மணப்பெண் இறந்ததை உறுதிசெய்தார்.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள், என்ன செய்வதென்ேற தெரியாமல் திகைத்து நின்றனர். மாரடைப்பு காரணமாக மணமகள் இறந்திருக்கலாம் என்று மருத்துவர் தெரிவித்தார். பின்னர் இருதரப்பு பெற்றோர்களும் திடீர் முடிவை எடுத்தனர். திருமணம் எக்காரணத்தை கொண்டும் நின்றுவிடக் கூடாது என்பதற்காக, சூரபியின் தங்கையான நிஷாவிற்கும் மஞ்சேஷ் குமாருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். அதன்படி, குறிப்பிட்ட நேரத்தில் திருமணம் நடந்தது. சில மணி நேர சடங்குகளுக்கு பின்னர், திருமண ஊர்வலம் முடிந்த பின்னர், சூரபி உடல் தகனம் செய்யப்பட்டது. ஒருபக்கம் துக்கம், மற்றொரு பக்கம் சந்தோஷம் என்று நிலையில் குடும்பமே நிலைகுலைந்து போயிருந்தது.

இதுகுறித்து சூரபியின் மாமா அஜாப் சிங் கூறுகையில், ‘எங்கள் குடும்பத்திற்கு இது மிகவும் சோகமான நேரம். ஒரு மகள் அறையில் இறந்து கிடந்தாள். மற்றொரு மகள் வேறொரு அறையில் திருமணம் செய்துகொண்டிருந்தாள். மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டிய எங்களுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டுவிட்டது. திருமணமும், மரணமும் ஒரே இடத்தில் நடந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இரு குடும்பங்களும் ஒன்றாக பேசி முடிவெடுத்து, நிஷாவை மணமகன் மஞ்சேஷ்குமாருக்கு திருமணம் செய்து வைத்தோம். இருவரும் ஒப்புக் கொண்ட பின்னரே இந்த முடிவை வெளியிட்டோம்’ என்று சோகத்துடன் கூறினார்.


Tags : Akkall , Happiness, sadness on the same stage, the sudden death of the bride who climbed the stage: the bride's sister with grief
× RELATED தங்கையை காப்பாற்ற முயன்ற அக்காள் கிணற்றில் மூழ்கி சாவு