லீவு கொடுங்க... இல்லாட்டி ராஜினாமாவை ஏத்துக்குங்க! ஆக்சிஜன் உதவியுடன் வங்கிக்கு வந்த ஊழியர்

ராஞ்சி: வங்கியில் விடுப்பு கொடுக்காததால், ஆக்சிஜன் உதவியுடன் வங்கி ஊழியர் ஒருவர் பணிக்கு வந்தது ஜார்கண்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜார்கண்ட் மாநிலம் போகாரோ பிரிவு 4-இல் அமைந்துள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் பணியாற்றும் ஊழியர் அரவிந்த் என்பவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தனக்கு சில நாட்கள் விடுமுறை தேவை என்று வங்கி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், வங்கி நிர்வாகம் விடுமுறை அளிக்காததால், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படாத நிலையில், அங்கிருந்து வெளியேறினார்.

பின்னர், தனது மனைவி மற்றும் மகனுடன் வங்கிக்கு ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்தார். அவரது முகத்தில் ஆக்சிஜன் குழாயை பொருத்திக் கொண்டு அலுவக பணியை பார்த்தார். மேலும், தான் ஆக்சிஜன் உதவியுடன் வங்கியில் பணியாற்றி வருவதாக, ஒரு வீடியோவை பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இவரது வீடியோ வெளியான சில நிமிடங்களில் வைரலானது. இந்த வீடியோவில், வங்கி ஊழியர் அரவிந்த் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட நிலையில், வங்கிக்குள் நுழைகிறார். தனது குடும்பத்தினருடன் படிக்கட்டுகள் வழியாக, அதிகாரியின் அறைக்குச் செல்கிறார்.

விடுப்பு வழங்காததற்கான காரணத்தை, வங்கி அதிகாரியிடம் குடும்ப உறுப்பினர்கள் கேட்கிறார்கள். இருதரப்பும் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென வாக்குவாதமாக மாறியது. மேலும், அரவிந்த் அந்த வீடியோவில், ‘எனது சம்பள பணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வங்கி மேலாளர் எனக்கு நிறைய நெருக்கடி தருகிறார். அவர் எனக்கு விடுப்பு அளிக்கவில்லை. நான் ராஜினாமா கடிதம் கொடுத்தேன். ஆனால் அதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. வங்கி நிர்வாகம், தற்போது எனது சம்பளத்தை குறைப்பதாக அச்சுறுத்துகிறது. அதனால், ஆக்சிஜன் சிலிண்டருடன் வேலை செய்ய அலுவலகத்திற்கு வர வேண்டியிருந்தது’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் கேட்டபோது, வீடியோவில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஏற்புடையது அல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, முன் அனுமதியின்றி அவர் வங்கிக்கு வந்து செல்வதாக கூறினர்.

Related Stories: