புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த கணவர்: மனைவி இன்று முறைப்படி ராணுவத்தில் இணைந்தார்

டெல்லி: புல்வாமா தீவிரவாதிகள் தாக்குதலில் விபூதி ஷங்கர் தவுன்டியால் வீர மரணமடைந்ததை அடுத்து, அவரின் மனைவி சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று இன்று முறைப்படி ராணுவத்தில் இணைந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதே மாதம் 20ஆம் தேதி அன்று பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான 18 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ராணுவ மேஜர் விபூதி ஷங்கர் தவுன்டியால் உள்பட 4 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

டேராடூனைச் சேர்ந்த 34 வயதான மேஜர் விபூதிக்கு 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் திருமணம் ஆகியிருந்தது. திருமணமான 10 மாதங்களில் நடைபெற்ற தாக்குதலில் வீர மரணமடைந்தார். நீங்கள் என்னை விட இந்த தேசத்தைத்தான் அதிகம் விரும்பினீர்கள் என்று கூறி, கணவருக்குக் கடைசி முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் மனைவி நிகிதா கவுல். அத்துடன் ராணுவத்தில் பணியாற்ற முடிவெடுத்து சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்தார் நிகிதா.

31 பெண்களுடன் 11 மாதங்கள் நிகிதா ராணுவப் பயிற்சியை எடுத்த நிலையில், லெஃப்டினென்ட் நிகிதா கவுல் ஆக இன்று முறைப்படி ராணுவத்தில் இணைந்தார். பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சியில், நிகிதா கவுல் இன்று ராணுவ உடையுடன் வந்து இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்டர் ஜெனரல் ஒய்.கே.ஜோஷியிடம் நட்சத்திரத்தை அணிந்துகொண்டு முறைப்படி ராணுவத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்து லெஃப்டினென்ட் நிகிதா கவுல் கூறுகையில், என்னுடைய பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய மாமியார், தாய் மற்றும் என்னுடைய பயணத்தில் பங்கு வகித்த அனைவருக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>